search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை பயிற்சியாளர் யார்? என்ற அறிவிப்பு இன்று இல்லை: கங்குலி
    X

    தலைமை பயிற்சியாளர் யார்? என்ற அறிவிப்பு இன்று இல்லை: கங்குலி

    தலைமை பயிற்சியாளர் நியமிப்பது குறித்து கேப்டன் மற்றும் சிலரிடம் பேச வேண்டியிருப்பதால், பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு இன்று இல்லை எனக் கங்குலி கூறியுள்ளார்.
    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. இவருக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையில் மனக்கசப்பு இருந்ததால், அனில் குமப்ளேயின் பதவிக்காலம் ஓராண்டிற்குப் பிறகு நீட்டிக்கப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின், வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை அவரை பயிற்சியாளராக பணியாற்றும்படி பிசிசிஐ கேட்டுக்கொண்டது. ஆனால், அனில் கும்ப்ளே தனது பதவியில் இருந்து விலகினார்.

    இந்திய அணி வரும் 26-ந்தேதி இலங்கையுடன் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. இந்த தொடருக்கு முன் புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க கங்குலி தலைமையிலான ஆலோசனைக்குழு (கங்குலியுடன் லஷ்மண், தெண்டுல்கர்) தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 10 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 6 பேரிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டு, மாலை புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று கங்குலி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் நேர்காணல் முடிந்த பின்னர் கங்குலி பேட்டியளித்தார். அப்போது புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு இன்று இல்லை என்று கூறினார்.



    புதிய தலைமை பயிற்சியாளர் குறித்து கங்குலி கூறுகையில் ‘‘புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு இன்று இல்லை. இன்னும் சில நாட்கள் தேவைப்படுகிறது. இன்று ராஜ்புட், ரவி சாஸ்திரி, சேவாக், பைபஸ் மற்றும் டாம் மூடி ஆகியோருடன் நேர்காணல் நடைபெற்றது.

    கேப்டன் உள்பட சிலபேரிடம் ஆலோசனை பெற வேண்டியுள்ளது. உடனடியாக பயிற்சியாளர் பெயரை அறிவிக்க வேண்டாம் என்று நினைக்கின்றோம். இலங்கை தொடரை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை’’ என்றார்.
    Next Story
    ×