search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது- தமிழக சபாநாயகரின் நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் தடை
    X

    3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது- தமிழக சபாநாயகரின் நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் தடை

    அதிமுகவின் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. #MLAsDisqualification #SpeakerDhanapal
    சென்னை:

    டி.டி.வி.தினகரனை ஆதரித்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனால் 18 தொகுதிகள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டன. அதில் 16 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 18-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. மேலும் 2 தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது இவர்கள் மூவரும் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்தனர். அதன் படி ரத்தினசபாபதி, கலைச் செல்வன், பிரபு 3 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சபாநாயகரை சந்தித்து மனு கொடுத்தார்.

    அந்த மனுவை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் தனபால் 3 எம்.எல்.ஏ.க் களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸ் ஒவ்வொன்றும் தலா 78 பக்கங்கள் கொண்டதாக உள்ளது. அதில் 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு 3 எம்.எல்.ஏ.க்களும் ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் உத்தர விட்டார். அவர் அனுப்பிய நோட்டீஸ் கடந்த மாதம் 30-ந்தேதி 3 எம்.எல். ஏ.க்களுக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டது.

    அதை ஏற்று 3 எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் விளக்கம் அளித்த பிறகு 3 எம். எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்டு விடும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன் இருவரும் கடந்த 3-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்களை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உள் நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இது சட்ட விரோதமானது. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் அவர் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப அதிகாரம் இல்லை. என்றாலும் அவர் எங்களை ஓரிரு நாட்களில் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே எங்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தங்கள் மனுவில் கூறி இருந்தனர்.

    சுப்ரீம்கோர்ட்டில் இந்த மனு மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் கொண்ட பெஞ்சில் நடந்தது. அப்போது இரு தரப்பு வக்கீல்களும் ஆஜரானார்கள்.

    ஆனால் வக்கீல்கள் வாதம் எதுவும் நடைபெறவில்லை. 2 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்ததுமே நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.

    சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 1½ நிமிடத்தில் இந்த வழக்கு விசாரணை முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

    2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கைகளை தொடரக் கூடாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பதற்கு விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இதன் காரணமாக உடனடியாக 3 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் தனபால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுப்ரீம்கோர்ட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலையும் உருவாகி உள்ளது.

    சபாநாயகர் தரப்பில் இருந்து விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்குள் கோர்ட்டுகளுக்கு கோடைகால விடுமுறை அமலுக்கு வந்து விடும்.

    அந்த விடுமுறை நாட்களில் சிறப்பு கோர்ட்டுகள் மட்டுமே இயங்கும். மிக மிக அவசர வழக்குகளுக்கு மட்டுமே அந்த சிறப்பு கோர்ட்டில் உத்தரவுகள் வழங்கப்படும்.

    எனவே சபாநாயகர் தனபால் அனுப்பும் விளக்கம் சிறப்பு கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்படுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. இதன் காரணமாக 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் ஏற்பட்ட தகுதி நீக்க அபாயம் தற்காலிகமாக தற்போது தள்ளி போய் உள்ளது.

    சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது பற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வுக்கு இதனால் எந்த பின்னடைவும் கிடையாது. தடை என்பது தற்காலிகமானதுதான். சபாநாயகர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டால் அந்த தடை தானாக விலகிவிடும். எனவே உரிய பதில் விளக்கம் விரைவில் அளிக்கப்படும்.

    3 எம்.எல்ஏ.க்கள் தங்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். அதற்கு தகுந்த போதிய ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் கட்சி கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார்.

    அதோடு அந்த புகாருக்கு ஆதாரமான புகைப் படங்களையும் இணைத்துள்ளார். இதற்கு விளக்கம் கேட்டுதான் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அதற்கு எம்.எல்.ஏ.க்கள் பதில் தராமல் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர்.

    சபாநாயகர் மீது தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. நிச்சயமாக அந்த தீர்மானம் தோல்வி அடையும்.

    சபாநாயகரின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் ஒருபோதும் தலையிட முடியாது. மீண்டும் இது நிரூபிக்கப்படும்.

    இவ்வாறு வைகைசெல்வன் கூறினார். #MLAsDisqualification #SpeakerDhanapal
    Next Story
    ×