search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியை ‘திருடன்’ என்று விமர்சனம் - ராகுல், சுப்ரீம் கோர்ட்டில் வருத்தம் தெரிவித்தார்
    X

    மோடியை ‘திருடன்’ என்று விமர்சனம் - ராகுல், சுப்ரீம் கோர்ட்டில் வருத்தம் தெரிவித்தார்

    மோடியை திருடன் என்று விமர்சனம் செய்தது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். #RahulGandhi #SupremeCourt
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் ரக விமானம் ஒப்பந்தம் செய்ததில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

    ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட்டு எந்த முறைகேடும் நடந்து இருப்பதாக தெரியவில்லை என்று கூறியது.

    இதற்கிடையே ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டது. இதை தொடர்ந்து ரபேல் விவகாரம் குறித்து மறு ஆய்வு விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

    இதற்கிடையே தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடியை ராகுல்காந்தி தரம் தாழ்ந்த வகையில் பேசினார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியே கூறிவிட்டார் என்று அவர் பேசினார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜனதா சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்தது.

    புதுடெல்லி தொகுதி பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி தாக்கல் செய்த மனுவில் ‘ரபேல் குறித்த உத்தரவில் பிரதமர் மோடியைப் பற்றி நீதிபதி எதுவும் கூறாத நிலையில் அந்த உத்தரவை ராகுல் திரித்து கூறி வருகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ராகுல் பொய் சொல்லி பிரசாரம் செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’. என்று கூறியுள்ளார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இதுகுறித்து வருகிற 22-ந்தேதிக்குள் ராகுல்காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.



    இந்தநிலையில் மோடியை திருடன் என்று விமர்சனம் செய்தது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் இன்று வருத்தம் தெரிவித்தார்.

    அவர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டே கூறிவிட்டதாக சொன்ன எனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். நான் கூறிய கருத்துகள் அரசியல் எதிரிகளால் தவறாக பயன்படுத்தப்பட்டு விட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடக்கிறது. #RahulGandhi
    Next Story
    ×