search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயாவதியின் முன்னாள் செயலாளர் வீட்டில் வருமான வரி சோதனை- போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.100 கோடி டெபாசிட்
    X

    மாயாவதியின் முன்னாள் செயலாளர் வீட்டில் வருமான வரி சோதனை- போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.100 கோடி டெபாசிட்

    உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதியின் முன்னாள் செயலாளர் வீட்டில் நடத்திய சோதனையில், அவர் போலி நிறுவனங்களின் பெயரில் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்திருப்பது தெரியவந்துள்ளது. #Mayawati #ExSecerataryNetram #ITRaid
    புதுடெல்லி:

    உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதியின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான நேத்ரம் என்பவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பல போலி நிறுவனங்களின் வங்கிக்கணக்குகளில் ரூ.100 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

    கொல்கத்தாவை மையமாகக் கொண்டு போலி நிறுவனங்களைத் தொடங்கி, அவற்றின் வங்கிக்கணக்கில் ரூ.100 கோடி அளவிலான பணம் சேர்க்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  இது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    லக்னோ, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனையின்போது 4 சொகுசு கார்கள், ரூ.50 லட்சம் மதிப்பிலான  மோண்ட் பிளாக் பேனாக்கள், ரூ.2.2 கோடி பணம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

    நேத்ரம் வீட்டில் நடைபெற்ற சோதனையில், ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில், கடந்த 2011ம் ஆண்டு முதல் 24 சொத்துக்கள் தொடர்பாக ரூ.225 கோடி அளவிற்கு பணப்பரிவர்த்தனை செய்த தகவல் இருந்தது. எம்எல்ஏ, எம்பி தேர்தலில் போட்டியிட கட்சியினருக்கு சீட் ஒதுக்குவது தொடர்பாக நேத்ரம் பேச்சுவார்த்தை நடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    டைரியில் இருந்த குறிப்புகளின்படி, லக்னோவில் உள்ள இவரது வீட்டில் இருந்து ரூ.18 லட்சம், டெல்லியில் உள்ள ஜிகே1 வீட்டில் ரூ.86 லட்சம், மற்றும் ரூ.2.2 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் நேத்ரம் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நேத்ரம் தொடர்புடைய நிறுவனங்கள், வங்கிக்கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட பணப்பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #Mayawati #ExSecerataryNetram #ITRaid

    Next Story
    ×