search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து போர் முனைகளில் சேவை செய்த அபிநந்தனின் தாயார்
    X

    சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து போர் முனைகளில் சேவை செய்த அபிநந்தனின் தாயார்

    பாகிஸ்தானில் போர்க்கைதியாக பிடிபட்டு விடுவிக்கப்பட்ட விமானி அபிநந்தனின் தாயார், சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து போர் முனைகளில் சேவை செய்துள்ளார். #Abhinanthan #Shobha
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

    கடந்த 26-ந்தேதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. மறுநாள் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது, அவற்றை விரட்டியடிக்கும் பணியில் இந்திய போர் விமானங்கள் ஈடுபட்டன.

    இதில், இந்திய விமானி அபிநந்தன் சென்ற விமானம் நொறுங்கி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் விழுந்தது. அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. அவரை விடுவிக்க வேண்டுமென்று இந்தியா கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து நேற்று அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

    வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை இந்திய ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்த அபிநந்தன் அச்சமின்றி துணிவுடன் வீரநடை போட்டு இந்திய எல்லைக்குள் மிடுக்குடன் நுழைந்தார்.

    அபிநந்தனின் வீரத்தையும், எதிரி நாட்டுக்குள் துணிச்சலுடன் அவர் நடந்து கொண்ட செயலுக்கும் இந்திய மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.



    அபிநந்தனின் வீரத்திற்கும், விவேகத்திற்கும் அவரது குடும்பமே காரணம் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அபிநந்தனின் தந்தை விமானப்படையில் பணிபுரிந்தவர். அவரது தாயார் ஷோபா மருத்துவம் படித்தவர்.

    தந்தை ராணுவத்தில் பணிபுரிந்து வந்தபோது, தாயார் ஷோபா போர் முனைகளில் மருத்துவ சேவை புரிந்துள்ளார். அவர், வீரத்தை ஊட்டி வளர்த்ததால் அபிநந்தன் தீரத்துடன் செயல்பட்டுள்ளார்.

    அபிநந்தனின் தாயார் ஷோபா, சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். படிப்பு முடிந்ததும் போர் முனைகளில் மருத்துவச் சேவை புரியும் அமைப்பில் இணைந்தார். உலகில் மிகப்பெரும் போர்கள் நடந்த பகுதிகளுக்கு சென்று போரில் காயம் பட்டவர்களுக்கு சேவை ஆற்றினார்.

    குறிப்பாக லைபீரியா போர், நைஜிரீயா போர், கேத்தி யுத்தம், ஈரான், ஈராக் போர், ஐவரி கோஸ்ட் போர், பப்புவான் கினியா நாட்டில் நடந்த யுத்தங்களின்போது மருத்துவச்சேவை ஆற்றி உள்ளார்.

    2-வது வளைகுடா யுத்தம் நடந்தபோதும், போர்முனையில் இருந்தார். அப்போது மயிரிழையில் உயிர் பிழைத்தவர் ஆவார்.

    இப்படி அபிநந்தனின் தாயார் முழுக்க முழுக்க போர்முனைகளில் பணியாற்றியதால் அவரது மகன் அபிநந்தனுக்கு போர் பயம் எதுவும் இல்லை. எதிரி நாட்டுக்குள் நுழைந்தும் அவர், உயிருடன் நாடு திரும்பி உள்ளார்.

    அபிநந்தனின் தாயார் ஷோபாவின் தன்னலமற்ற சேவையை உணர்ந்து அவருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் அவர், டெல்லி செல்ல விமானப்பயணம் மேற்கொண்டபோது விமானத்தில் பயணம் செய்த அனைவரும் எழுந்து நின்று ஷோபாவுக்கு வீரவணக்கம் செலுத்தினர். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. #Abhinanthan #Shobha
    Next Story
    ×