search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இட ஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் சமூகத்தினர் ரெயில் மறியல்: டெல்லி-மும்பை வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு
    X

    இட ஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் சமூகத்தினர் ரெயில் மறியல்: டெல்லி-மும்பை வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு

    ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு மீண்டும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. #GujjarsProtest #GujjarsQuota
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என 2017ல் மாநில அரசு வாக்குறுதி அளித்தது. இதற்காக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், மசோதாவை நிறுத்திவைத்தது. இதனால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.

    இந்நிலையில், குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அரசு வாக்குறுதி அளித்தபடி, 5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மீண்டும் ரெயில்  மறியல் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றும்போது, ஏன் எங்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடியாது? என குஜ்ஜார்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    டெல்லி-மும்பை பிரதான ரெயில் பாதையில், சவாய் மதோபூர் மாவட்டம் மக்சுதன்புரா என்ற இடத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் தண்டவாளத்தில் அணிவகுத்துச் சென்று, பின்னர் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 4 ரெயில்கள், சேர வேண்டிய இடங்களுக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டன. 7 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. ஒரு ரெயில் ரத்து செய்யப்பட்டது.



    இன்றும் ரெயில் மறியல் போராட்டம் நீடிக்கிறது. போராட்டக்காரர்கள் தண்டவாளத்தை மறித்து கூடாரங்கள் அமைத்து, அதற்குள் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் காரணமாக இன்றும் மும்பை-டெல்லி வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 5 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 அமைச்சர்கள் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. அவர்கள் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். #GujjarsProtest #GujjarsQuota
    Next Story
    ×