search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் போட்டி - பொதுமக்கள் கருத்தை கேட்க ஆட்டோவில் சென்ற பிரகாஷ்ராஜ்
    X

    பாராளுமன்ற தேர்தலில் போட்டி - பொதுமக்கள் கருத்தை கேட்க ஆட்டோவில் சென்ற பிரகாஷ்ராஜ்

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜ் பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக ஆட்டோவில் சென்றார். #ParlimentElection

    பெங்களூரு:

    நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து தீவிரமாக அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசை எதிர்த்து டுவிட்டரில் அடிக்கடி கருத்து வெளியிட்டு வந்தார்.

    தனது நெருங்கிய தோழியான பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் பா.ஜனதா அரசை மிக கடுமையாக சாடினார்.

    பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை. கமல்ஹாசன், ரஜினிகாந்த் போல தனிக் கட்சி தொடங்குவாரா? என்றும் கேட்கப்பட்டது. அப்போது எல்லாம் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று கூறி வந்தார்.

    ஆனால் திடீரென்று கடந்த 1-ந்தேதி பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும், விரைவில் தொகுதி பற்றி அறிவிக்க இருப்பதாகவும் அறிவித்தார். அடுத்த சில தினங்களில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க அவர், முடிவு செய்துள்ளார்.

    அதில், பொதுமக்களின் பிரச்சினைகளை தெளிவாக குறிப்பிட்டு அதற்கு என்ன தீர்வு காண வேண்டும் என்பதை தெரிவிக்க அவர், திட்டமிட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து பெங்களூரு மத்திய பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 8 சட்டசபை தொகுதியிலும் உள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிய பிரகாஷ் ராஜ் முடிவு செய்தார்.

    ஆட்டோவில் சென்று பொதுமக்களை சந்திக்க அவர் முடிவு செய்தார். அதன்படி, 8 தொகுதிகளுக்கும், 8 ஆட்டோக்களில் தனது பிரதிநிதிகளை அனுப்பி பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிய திட்டமிட்டார்.

    இதற்கான தொடக்க நிகழ்ச்சி பெங்களூரு எம்.ஜி.ரோடு, மகாத்மா காந்தி சிலை அருகே நடைபெற்றது. அப்போது இதுபற்றி நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது:-

    அரசியல்வாதிகளை விட நிபுணர்களை விட சாதாரண மக்களுக்குதான் நாட்டின் பிரச்சினைகள் பற்றி தெளிவாக தெரியும். எனவே அவர்களை நேரில் சந்திப்பதன் மூலம் பிரச்சினைகளை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

    அதன் மூலம் தேர்தல் அறிக்கையை தயாரிக்க முடியும். அதற்காகவே பொது மக்களை சந்திக்க இந்த ஆட்டோ பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 நாட்கள் இந்த சுற்றுப் பயணம் நடைபெறும். அதன் மூலம் பொது மக்களிடமிருந்து அவர்களது பிரச்சினைகளை முழுமையாக தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூரு சி.வி. ராமன் நகர் பகுதியில் இருந்து நடிகர் பிரகாஷ்ராஜ், ஆட்டோவில் சென்று பொதுமக்களை சந்திக்க பயணமானார். அவரது ஆட்டோவை பெண் ஓட்டுநர் ஓட்டிச் சென்றார்.

    பெங்களூரு மத்திய தொகுதி கன்னடர்களை விட தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. கணிசமாக தெலுங்கு, மலையாளம் பேசும் மக்கள் உள்ளனர். முஸ்லீம்கள் கணிசமாக உள்ளனர்.

    இந்த தொகுதிக்குள் காந்திநகர், சிவாஜிநகர், சாந்திநகர், சி.வி.ராமன் நகர், சர்வக்ஞ நகர், ராஜாஜிநகர், சாம்ராஜ்பேட், மகாதேவபுரா ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் முதல் 5 தொகுதிகள் தமிழர்கள் நிறைந்து இருக்கும் தொகுதிகள்.

    சிவாஜிநகர் மற்றும் சர்வக்ஞநகர் தொகுதிகளில் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகம். இதில் பல சட்டசபை தொகுதிகளிலும் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்றவர்களே மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று வருகிறார்கள். இந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களில் பலரும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள். டுவிட்டரில் அரசியல் பேசி வந்த பிரகாஷ்ராஜ் இந்த தொகுதியில் வெல்வது சவால் தான்.

    இதுபற்றி பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில் விளக்கி உள்ளார். “பெங்களூரு மத்திய தொகுதியை ஒரு மினி இந்தியா என கூற முடியும். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், இந்துக்கள், கன்னட மொழியினர், தமிழர்கள், மலையாளி மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் கணிசமாக உள்ளனர்.

    அவர்கள் என்னை வெறும் நடிகராக மட்டும் பார்க்கவில்லை. சமூக பிரச்சினைகளில் எனது நிலைப்பாட்டை உணர்ந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×