search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
    X

    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். #CBIDirector #NageswaraRao

    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

    இதையடுத்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வராவை மத்திய அரசு நியமித்தது.

    இதை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக்வர்மா மீண்டும் இயக்குனர் பதவியை தொடரலாம் என்றும் தெரிவித்தது. எனினும் அலோக்வர்மா குறித்து இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான உயர் நிலை குழு முடிவு செய்யும் என்று தெரிவித்து இருந்தது.

    இதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பதவி ஏற்ற 2 நாட்களில் அவரை பதவி நீக்கம் செய்வதாக உயர்நிலை குழு அறிவித்தது.

    அதனை தொடர்ந்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் கடந்த 11-ந்தேதி மீண்டும் பொறுப்பு ஏற்றார்.

    அலோக் வர்மா தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த புதிய பதவியை ஏற்க மறுத்து அவர் ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக காமன்காஸ் தன்னார்வ அமைப்பு சார்பாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    டெல்லி சிறப்பு காவல் துறை சட்டத்தின்படி நிரந்தர சி.பி.ஐ. இயக்குனரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். நாகேஸ்வரராவை இடைக்கால இயக்குனராக நியமித்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனுவை அவசரமாக வருகிற வெள்ளிக்கிழமை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நிராகரித்தார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய், நீதிபதிகள் என்.எல். ராவ், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு அடுத்த வாரம் விசாரணை செய்கிறது.  #CBIDirector #NageswaraRao

    Next Story
    ×