search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிந்து, கனகதுர்கா
    X
    பிந்து, கனகதுர்கா

    சபரிமலையில் ஐயப்பனை தரிசித்த 2 கேரள பெண்களும் வீடு திரும்ப முடியாமல் தவிப்பு

    சபரிமலையில் ஐயப்பனை தரிசித்த பிந்து, கனகதுர்கா இருவரும் கேரளாவுக்கு வெளியே உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் மாறி மாறி தங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை.

    சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல பல இளம்பெண்கள் முயன்றனர்.

    சபரிமலை கோவில் ஆச்சாரப்படி இளம்பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை மீறி கடந்த 2-ந்தேதி கேரளாவின் மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டைச் சேர்ந்த இளம்பெண்கள் பிந்து, கனகதுர்கா இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர்.

    பிந்து, கனகதுர்கா இருவரும் சபரிமலையில் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள், பா.ஜனதா கட்சி இணைந்து முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் கலவரங்கள் நடந்தன.

    இதற்கு பதிலடியாக கம்யூனிஸ்டு கட்சியினரும் பேரணி, போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக பா.ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரின் தலைவர்கள் வீடு, அலுவலகங்கள் தாக்கப்பட்டன.

    கேரளாவில் நடந்த வன்முறை காரணமாக சபரிமலை கோவிலில் தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா இருவரும் போலீஸ் துணையுடன் தலைமறைவானார்கள். இவர்களை தேடி அலைந்த போராட்டக்காரர்கள் கேரளாவில் உள்ள பிந்து, கனகதுர்கா வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர்.

    மேலும் பிந்து, கனகதுர்கா இருவரும் கேரளா வந்தால் அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்தனர். இதனால் தலைமறைவான பிந்து, கனகதுர்கா இருவரும் இதுவரை சொந்த ஊர் திரும்பவில்லை.

    பிந்து, கனகதுர்கா இருவரும் கேரளாவுக்கு வெளியே உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் மாறி மாறி தங்கி வருவதாக தெரிய வந்துள்ளது. இதுபற்றி பிந்துவும், கனகதுர்காவும் கூறும்போது, சபரிமலைக்கு சென்றதால் எங்களுக்கு பயம் எதுவும் இல்லை. எங்களது ஒரே குறிக்கோள் சபரிமலைக்கு செல்ல வேண்டும், ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்பது தான். அது நிறைவேறியது.

    இப்போது உள்ள சூழ்நிலை மாறும். நாங்கள் கேரள அரசையும், போலீஸ் அதிகாரிகளையும் நம்புகிறோம். கேரள மக்களும், கேரள சமூகமும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் என்று கருதுகிறோம் என்றனர்.  #Sabarimala

    Next Story
    ×