search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிந்து"

    சபரிமலை வழக்கின் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று காரசாரமாக வாதம் நடைபெற்றது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பா.ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.  புதிய மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சீராய்வு மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் நரிமன், கான்வில்கர், சந்திரச்சூட் மற்றும் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வால் விசாரணை செய்யப்படுகிறது.

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு ஆதரவாக தங்களையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ளுமாறு நான்கு பெண்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர். கேரளாவை சேர்ந்த  ரேஷ்மா, ஷானிலா, பிந்து மற்றும் கனக துர்கா இந்த மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.

    ரேஷ்மா, ஷானிலா  இருவரும் இரண்டு முறை கோவிலுக்குள் நுழைய முயன்றவர்கள். பிந்து, கனகதுர்கா இருவரும் முதல்முறையாக கோவிலுக்குள் சென்று வந்தவர்கள் ஆவார்கள்.



    இந்நிலையில் சீராய்வு மனுக்கள் மற்றும் புதிய மனுக்கள் என 60க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை நடத்தியது. நாயர் சேவா சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் கே.பராசரன் ஆஜராகி வாதாடினார். அப்போது, மத நம்பிக்கை காரணமாகவே சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை என்றும், தீண்டாமையால் அல்ல என்றும் குறிப்பிட்டார். மரபுகளை பின்பற்றி யார் வேண்டுமானாலும் சபரிமலைக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரோகிண்டன் நாரிமன், வெறும் தீண்டாமை விஷயத்தை மட்டும் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும், பல விஷயங்களை அலசி ஆராய்ந்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

    அதன்பின்னர் தேவம்போர்டு முன்னாள் தலைவர் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடினார். தொடர்ந்து காரசாரமான வாதம் நடைபெறுகிறது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
    சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த கனதுர்காவை அவரது மாமியார் வீட்டை விட்டு விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Sabarimala #KanakaDurga
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய இருந்த தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் தற்போது நீங்கி உள்ளது.

    இதைத்தொடர்ந்து சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதனால் கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டு கலவரம் நடந்தது. இதைத் தொடர்ந்து கனகதுர்காவும், பிந்துவும் போலீஸ் பாதுகாப்புடன் தலைமறைவாக வாழும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் உள்ள தனது வீட்டிற்கு பிந்து திரும்பினார். அவருக்கு தற்போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.

    அதே சமயம் கனகதுர்கா மலப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றபோது அவருக்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கியதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டதால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    தற்போது உடல் நலம் தேறியதை தொடர்ந்து கனகதுர்கா மலப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு மீண்டும் சென்றார். இந்த முறை அவருடன் போலீசாரும் பாதுகாப்புக்கு சென்றார்கள்.


    ஆனால் கனகதுர்காவை வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அவரது கணவர், சகோதரர் மற்றும் உறவினர்கள் கூறிவிட்டனர்.

    இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறும்போது, கனகதுர்கா பாவம் செய்து விட்டார். ஆச்சாரத்தை மீறி சபரிமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததன் மூலம் அங்குள்ள சடங்குகளையும் மாற்றி விட்டார். எனவே அவர் பொது இடத்தில் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது தான் அவரை ஏற்றுக்கொள்வோம் என்றனர்.

    கனகதுர்காவின் சகோதரர் பரத்பூ‌ஷன் கூறும்போது இந்து சமூகத்திடமும், ஐயப்ப பக்தர்களிடமும் கனகதுர்கா மன்னிப்பு கேட்கும்வரை அவரை குடும்பத்தில் சேர்க்க மாட்டோம் என்றார்.

    போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போலீசார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் வேறு வழி இல்லாமல் கனகதுர்காவை போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தற்போது அவர் போலீஸ் பாதுகாப்பில் உள்ளார். #Sabarimala #KanakaDurga
    சபரிமலையில் ஐயப்பனை தரிசித்த பிந்து, கனகதுர்கா இருவரும் கேரளாவுக்கு வெளியே உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் மாறி மாறி தங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை.

    சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல பல இளம்பெண்கள் முயன்றனர்.

    சபரிமலை கோவில் ஆச்சாரப்படி இளம்பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை மீறி கடந்த 2-ந்தேதி கேரளாவின் மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டைச் சேர்ந்த இளம்பெண்கள் பிந்து, கனகதுர்கா இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர்.

    பிந்து, கனகதுர்கா இருவரும் சபரிமலையில் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள், பா.ஜனதா கட்சி இணைந்து முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் கலவரங்கள் நடந்தன.

    இதற்கு பதிலடியாக கம்யூனிஸ்டு கட்சியினரும் பேரணி, போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக பா.ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரின் தலைவர்கள் வீடு, அலுவலகங்கள் தாக்கப்பட்டன.

    கேரளாவில் நடந்த வன்முறை காரணமாக சபரிமலை கோவிலில் தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா இருவரும் போலீஸ் துணையுடன் தலைமறைவானார்கள். இவர்களை தேடி அலைந்த போராட்டக்காரர்கள் கேரளாவில் உள்ள பிந்து, கனகதுர்கா வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர்.

    மேலும் பிந்து, கனகதுர்கா இருவரும் கேரளா வந்தால் அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்தனர். இதனால் தலைமறைவான பிந்து, கனகதுர்கா இருவரும் இதுவரை சொந்த ஊர் திரும்பவில்லை.

    பிந்து, கனகதுர்கா இருவரும் கேரளாவுக்கு வெளியே உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் மாறி மாறி தங்கி வருவதாக தெரிய வந்துள்ளது. இதுபற்றி பிந்துவும், கனகதுர்காவும் கூறும்போது, சபரிமலைக்கு சென்றதால் எங்களுக்கு பயம் எதுவும் இல்லை. எங்களது ஒரே குறிக்கோள் சபரிமலைக்கு செல்ல வேண்டும், ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்பது தான். அது நிறைவேறியது.

    இப்போது உள்ள சூழ்நிலை மாறும். நாங்கள் கேரள அரசையும், போலீஸ் அதிகாரிகளையும் நம்புகிறோம். கேரள மக்களும், கேரள சமூகமும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் என்று கருதுகிறோம் என்றனர்.  #Sabarimala

    கடும் எதிர்ப்புக்கிடையில் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தது தொடர்பாக பிந்து, கனகதுர்கா பேட்டி அளித்துள்ளனர். #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கேரளாவை சேர்ந்த 44 வயது கனகதுர்கா மற்றும் 42 வயது பிந்து ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு சாமி தரிசனம் செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் ஏற்கனவே சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது ஐயப்ப பக்தர்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள். 2-வது முறையாக போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலை நேரத்தில் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்து உள்ளனர்.

    இவர்கள் முதலில் சபரிமலை சென்றுவிட்டு சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பியபோது தலைமறைவாகி விட்டனர். அப்போது அவர்கள் மாயமாகிவிட்டது பற்றி போலீசிலும் புகார் செய்யப்பட்டு விசாரணையும் நடந்தது. ஆனால் அந்த பெண்கள் 2 பேரும் எங்கே சென்றனர் என்ற மர்மம் தற்போது விலகி உள்ளது.

    பிந்துவும், கனகதுர்காவும் பெங்களூருவில் உள்ள ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்து உள்ளனர். அந்த லாட்ஜ் உரிமையாளருக்கு முதலில் அவர்கள் யார்? என்று தெரியவில்லை. அந்த பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு அவர்களது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வந்த பிறகு தான் அதை பார்த்து லாட்ஜ் உரிமையாளர், பிந்துவும், கனகதுர்காவும் தங்கள் லாட்ஜில் தங்கியிருந்ததை தெரிந்து கொண்டுள்ளார்.

    அந்த லாட்ஜில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் பிந்து, கனகதுர்கா அறையை பதிவு செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.

    தற்போது கனகதுர்காவும், பிந்துவும் கொச்சியில் உள்ள போலீஸ் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ளனர். அவர்களில் பிந்து கூறியதாவது:-

    நாங்கள் ஆம்புலன்சில் சென்று சாமி தரிசனம் செய்ததாக கூறுவது தவறு. பக்தர்களோடு, பக்தர்களாக நடந்து சென்று தான் சாமி தரிசனம் செய்தோம். இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதும் தவறு. எந்த அமைப்பையும் சார்ந்து இருக்கவில்லை.

    பா.ஜனதா நடத்திய மனித உரிமை தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி உள்ளேன். அதனால் என்னை பா.ஜனதாவைச் சேர்ந்தவர் என்று கூற முடியுமா? அதேபோல சபரிமலைக்கு சென்றதால் நான் கம்யூனிஸ்டும் கிடையாது. கம்யூனிஸ்டு என்றாலும் அவர்கள் பக்தர்களாக இருக்கக்கூடாதா?. நான் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தில் இருந்தேன். ஆனால் 8 ஆண்டுகளாக அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.

    கடந்த 24-ந் தேதி சபரிமலை சென்றபோது எங்களால் சுவாமி ஐயப்பனை தரிசிக்க முடியவில்லை. இதனால் சாமி தரிசனம் செய்த பிறகு தான் வீடு திரும்ப வேண்டும் என்ற உறுதியோடு உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் மாறி, மாறி வசித்தோம். போலீசார் வற்புறுத்தி எங்களை அழைத்து செல்லவில்லை. நாங்கள் தான் போலீசின் உதவியை நாடினோமே தவிர அவர்கள் எங்களை நாடவில்லை. பம்பை சென்று போலீஸ் பாதுகாப்பு கேட்டோம். போலீசார் பாதுகாப்பு வழங்கினார்கள். தற்போது ஊரில் போராட்டம் நடப்பதால் ஒதுங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நான் எனது சொந்த விருப்பத்தின் பேரில் தான் சபரிமலை சென்றேன். இதில் எந்த வற்புறுத்தலும் கிடையாது. பிந்துவுடன் எனக்கு ஏற்கனவே பழக்கம் உண்டு. இதனால் அவருடன் சேர்ந்து சென்று சாமி தரிசனம் செய்தேன். நான் கணவர், குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் எங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு நான் சபரிமலை செல்வதில் விருப்பம் இல்லை. எனது விருப்பத்தை நிறைவேற்றவே நான் சபரிமலை சென்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaTemple
    சபரிமலையில் பெண்கள் நுழைந்ததையடுத்து பரிகார பூஜை செய்த தந்திரிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. #SabarimalaIssue #SabarimalaTemplePriest
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

    உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.


    இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பிந்து (வயது 42), கனகதுர்கா (44) ஆகிய 2 பெண்கள் நேற்று அதிகாலையில் சபரிமலை ஐயப்பனை தரிசித்தனர். இதனை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலை மூடி பரிகார பூஜை செய்யப்பட்டது. அதன்பின்பே கோயில் நடை திறக்கப்பட்டது.

    இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்த தந்திரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் தினேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜனவரி 22-ம் தேதி மற்ற சீராய்வு மனுக்களுடன் சேர்த்தே இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. #SabarimalaIssue #SabarimalaTemplePriest

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பக்தர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பெண்களை அழைத்துச் செல்வதற்காக போலீசார் 7 நாட்களாக ரகசியமாக திட்டமிட்டது தெரியவந்துள்ளது. #Sabarimala #KanakaDurga #Bindu
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியான கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதிக்கு பிறகு கேரள அரசு எடுத்த எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. சபரிமலை கர்ம சமிதி, அய்யப்ப பக்தர்களின் கடும் எதிர்ப்பை மீறி எந்த பெண்களையும் போலீசாரால் சன்னிதானம் அழைத்து செல்லமுடியவில்லை.

    இதனை பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் பெண்கள் நல ஆர்வலர்கள் பலரும் விமர்சித்தனர். இது ஆளும் கம்யூனிஸ்டு அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு என்று கூறப்பட்டது.

    இதையடுத்து மகரவிளக்கு சீசன் காலத்தில் எப்படியாவது பெண்களை சபரிமலை சன்னிதானத்துக்கு அழைத்து செல்ல அரசு முடிவு செய்தது. இதற்கு பொருத்தமான நபர்களை கண்டறியும் பணியில் கேரள போலீசார் ஈடுபட்டனர்.

    அவர்களின் பார்வையில் பட்டவர்கள் மலப்புரம் கொயிலாண்டியை சேர்ந்த பிந்து (வயது 40), கோழிக்கோட்டை சேர்ந்த கனகதுர்கா (44) என்ற 2 பெண்கள். இவர்களில் பிந்து கல்லூரி ஆசிரியை, மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தீவிர ஆதரவாளர். அவரது தோழி கனகதுர்காவும் இதே சிந்தனை கொண்டவர். கூட்டுறவு ஊழியர்.

    பிந்து, கனகதுர்கா இருவரையும் சபரிமலைக்கு அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்தனர். கடந்த மாதம் 24-ந் தேதி இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்றனர். சன்னிதானம் அருகே போராட்டக்காரர்கள் தடுப்பு சுவர் போல திரண்டு இரண்டு பெண்களையும் வழிமறித்தனர்.

    இதனால் சன்னிதானம் செல்லமுடியாமல் பிந்துவும், கனகதுர்காவும் பாதியிலேயே வீடு திரும்பினர்.

    சன்னிதானம் செல்ல முடியாமல் திரும்பிய பிந்து, கனகதுர்கா இருவரும் அதன்பின்பு வீடு திரும்பவில்லை. திடீரென அவர்கள் மாயமாகி விட்டனர். உறவினர்கள் அவர்களை தேடிய போது கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். உறவினர்கள் அங்கு சென்ற போது ஆஸ்பத்திரியில் அவர்கள் இல்லை.

    எனவே அவர்கள் இருவரும் போராட்டக்காரர்களுக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இந்து அமைப்புகளும் இதை நம்பினர்.

    போராட்டக்காரர்களின் நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த கேரள போலீசார் திட்டமிட்டனர். அதன்படி பிந்து, கனகதுர்கா இருவரையும் மீண்டும் சபரிமலை அழைத்து செல்ல போலீசார் ரகசிய திட்டம் வகுத்தனர்.

    சன்னிதானம் செல்ல போலீசார் முடிவு செய்த நாள் ஜனவரி 2. இந்த நாளில் சபரிமலையில் கூட்டம் அதிகம் இருக்காது என்று போலீசார் கருதினர். இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

    ஜனவரி 1-ந்தேதி கேரள அரசு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மகளிர் மனித சுவர் போராட்டம் நடத்தியது. இதில் யார்- யார் பங்கேற்கிறார்கள் என்பதை பார்க்க போராட்டக்காரர்கள் அவரவர் ஊருக்கு செல்வார்கள் என போலீசார் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடி போராட்டக்காரர்கள் பலரும் ஊர் திரும்பினர்.

    இச்சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட போலீசார் கோட்டயம் எஸ்.பி. ஹரிசங்கர், உளவுத்துறை டி.ஐ.ஜி. சுரேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் பிந்து, கனகதுர்கா இருவரையும் சபரிமலை அழைத்து செல்ல திட்டமிட்டனர்.

    இத்திட்டத்தை நிறைவேற்ற தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சாதாரண உடையில் பம்பை வந்தனர். நேற்று அதிகாலை வந்து சேர்ந்த போலீஸ் படை பிந்து, கனகதுர்கா இருவருக்கும் சாதாரண உடையில் பாதுகாப்பு அளித்தனர்.

    சாதாரண போலீசாரின் பாதுகாப்புடன் பிந்து, கனகதுர்கா இருவரும் சபரிமலைக்கு பொருள்கள் கொண்டு செல்லும் டிராக்டர் பாதையில் அழைத்து செல்லப்பட்டனர். அதிகாலை 1.30 மணிக்கு இவர்களின் பயணம் தொடங்கியது. 3 மணிக்கு பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்றடைந்தனர்.

    அப்போது கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் பாடப்பட்டது. இந்த நேரத்தில் 18 -ம் படியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் ஊழியர்கள் கோவிலின் பின்பகுதியில் உள்ள வாயில் வழியாக செல்லத்தொடங்கினர்.


    அவர்களுடன் பிந்துவும், கனகதுர்காவும் இணைந்து கொண்டனர். அப்போது அவர்களை அடையாளம் கண்டுகொண்ட சில ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அங்கு நின்ற உயர் அதிகாரிகள் அவர்களை விரட்டினர்.

    எதிர்ப்பு அகன்றதும் பிந்து, கனகதுர்கா இருவரும் மிக எளிதாக சன்னிதானம் சென்றடைந்தனர். அங்கு சாமி தரிசனமும் செய்தனர். இதனை அர்ச்சகர்கள், தந்திரிகள் யாரும் கவனிக்கவில்லை.

    பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானத்தில் தரிசனம் முடிந்து பம்பை திரும்பிய பின், பத்திரிகையாளர்களை சந்தித்து தரிசனம் செய்ததை கூறிய பிறகே இந்த விபரம் பக்தர்களுக்கு தெரியவந்தது.

    இச்சம்பவத்திற்கு முழுக்க, முழுக்க போலீஸ் உயர் அதிகாரிகளே காரணம் என்றும் இதற்காக அவர்கள் கடந்த ஒரு வாரமாக திட்டமிட்டு காய் நகர்த்திய விபரத்தையும் அறிந்து கொண்ட பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    தற்போது அவர்களின் போராட்டத்தை முறியடிக்கும் முயற்சிகளில் போலீசார் இறங்கி உள்ளனர். அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பெண்கள் இருவரை சன்னிதானம் வரை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்துவிட்டோம் என்று அரசு மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது. #Sabarimala #KanakaDurga #Bindu
    ×