search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை வழக்கில் கைதான கவிதா, மோகன்ராஜ், மகேஸ்வரி
    X
    கொலை வழக்கில் கைதான கவிதா, மோகன்ராஜ், மகேஸ்வரி

    காதல் தகராறில் சென்னை வியாபாரி கடத்தி கொலை- பெண்கள் உள்பட 5 பேர் கைது

    காதல் தகராறில் சென்னை வியாபாரியை காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    சென்னை கொடங்கனியார் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த குமார், தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இவர், தன்னுடைய தாயார் தனலட்சுமியோடு வசித்து வந்தார். இவருடைய உறவினர் மோகன்ராஜ், இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.

    மனைவி மகேஸ்வரி. இவருடைய மகள் சங்கீதா. பி.டெக் படித்துள்ளார். மகேஸ்வரி, மோகன்ராஜிடம் இருந்து விவாகரத்துப் பெற்று, ஐகோர்ட்டு வக்கீலாக வேலை பார்த்து வந்த நந்தகோபால் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    சங்கீதா தன்னுடைய முறை மாமன் பழ வியாபாரி ஆனந்தகுமாரை 2015-ம் ஆண்டில் இருந்து காதலித்தார். அவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. மோகன்ராஜ் தன்னுடைய மகள் சங்கீதாவை வசதி படைத்தவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். படிக்காத ஏழையான ஆனந்தகுமாருக்கு, மகளை திருமணம் செய்து வைக்க மாட்டேன் என கூறி வந்தார். இதனால் சங்கீதாவும், ஆனந்த குமாரும் வீட்டை விட்டு வெளியேறி ரகசியமாக திருமணம் செய்ய திட்ட மிட்டனர்.

    இதனை அறிந்த மோகன்ராஜ் தன்னுடைய மகள் சங்கீதாவுக்கு, வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க திட்டமிட்டார். அதற்காக அவர், மாப்பிள்ளையும் பார்த்து விட்டார். அந்தத் தகவலை சங்கீதா தன்னுடைய முறைமாமன் ஆனந்த குமாரிடம் தெரிவித்துள்ளார். தந்தை பார்க்கும் மாப்பிள்ளையை தான், நான் திருமணம் செய்து கொள்வேன் என சங்கீதா, ஆனந்தகுமாரிடம் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை கேள்விப்பட்ட ஆனந்தகுமார் கடும் ஆத்திரம் அடைந்தார்.

    சங்கீதா தன்னை காதலித்து மோசடி செய்து விட்டதாக செல்போன் மூலமாக தகாத தகவல்களை ஆனந்தகுமார் பரப்பி வந்தார். இதனால் சங்கீதா குடும்பத்துக்கும், ஆனந்தகுமார் குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இரு குடும்பத்தினரும் கொடங்கனியார் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஆனந்தகுமார் இருக்கும் வரை சங்கீதாவுக்கு திருமணம் செய்ய முடியாது. எனவே அவரை கொலை செய்ய வேண்டும் என சங்கீதாவின் குடும்பத்தினர் திட்டமிட்டனர்.

    இதையடுத்து சங்கீதாவை அவரின் குடும்பத்தினர் மீண்டும் ஆனந்தகுமாருடன் செல்போன் மூலமாக பேச வைத்தனர். தகராறை மறந்து நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆனந்தகுமாரிடம் சங்கீதாவை சொல்ல வைத்தனர். அதனை, அவரும் உண்மை என நம்பினார். எனவே நீ மட்டும் தனியாக வந்தால், எங்களின் குடும்பத்தினரின் முன்னிலையில் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என சங்கீதா அவரிடம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே சங்கீதாவின் பெற்றோரும், உறவினர்களும் ஏற்கனவே போட்டிருந்த சதித்திட்டத்தின் படி 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி ஆனந்த குமாரை சங்கீதா மூலமாக திருப்பதிக்கு வர வழைத்துள்ளனர். அவரும் திருப்பதி அருகே வந்தார். சங்கீதாவின் தந்தை மோகன் ராஜ் மற்றும் தாயார் மகேஸ்வரி, இவருடைய 2-வது கணவர் நந்தகோபால் மற்றும் உறவினர்கள் வெங்கடேஷ், கவிதா, ஏழுமலை ஆகியோர் ஒரு காரில் திருப்பதிக்கு வந்தனர். திருப்பதி எல்லைப் பகுதியில் நின்றிருந்த ஆனந்த குமாரை அவர்கள் தங்களின் காரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர்.

    அன்று இரவு ஆனந்த குமாரை ஏர்ப்பேடுவை அடுத்த பூதலப்பட்டு- நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு குடோனுக்கு அருகே கொண்டு வந்தனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, ஆனந்தகுமாரை அவர்கள் சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்தனர். பிணத்தை அதே பகுதியில் போட்டு விட்டு அவர்கள் தலைமறைவாகினர்.

    மறுநாள் காலை ஏர்ப்பேடு போலீசுக்கு தகவல் தெரிந்ததும், ஆனந்தகுமாரின் பிணத்தைப் போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மர்மச் சாவாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜன் உத்தரவுபடி, ஏர்ப்பேடு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற முரளிநாயக் அந்த வழக்கை விசாரித்தார்.

    சென்னையில் கொடங்கனியார் போலீஸ் நிலையத்தில் ஆனந்தகுமார் காணாமல் போய் விட்டதாக அவரின் தாயார் தனலட்சுமி கொடுத்த புகார் மீது இன்ஸ்பெக்டர் முரளிநாயக் விசாரணை நடத்தினார். அவர், சென்னைக்கு சென்றும் விசாரித்தார். விசாரணையில் அவர், ஆனந்தகுமார் என்றும், அவர் காதல் தகராறில் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

    இது தொடர்பாக மோகன்ராஜ், வக்கீல் நந்தகோபால், மகேஸ்வரி, கவிதா, வெங்கடேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். சங்கீதா, ஏழுமலை ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை ஏர்ப்பேடு போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×