search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலுவலகத்தில் காத்துக் கிடக்க தேவையில்லை வீடு தேடி வரும் 40 சேவைகள் - டெல்லி அரசு அறிமுகம்
    X

    அலுவலகத்தில் காத்துக் கிடக்க தேவையில்லை வீடு தேடி வரும் 40 சேவைகள் - டெல்லி அரசு அறிமுகம்

    பிறப்பு, இறப்பு, பென்சன், வருவாய், சாதி சான்றிதழ்கள் உள்ளிட்ட 40 விதமான அரசு சேவைகளை வீடுகளுக்கே சென்று அளிக்கும் திட்டத்தை டெல்லி ஆம் ஆத்மி அரசு இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்த இருக்கிறது. #Delhi #AamAaadmi
    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மிகவும் மோசமான நிலையில் இருந்த அரசு பள்ளிகளை சீர்படுத்தி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தி சமீபத்தில் சாதித்து காட்டியது. அதேபோல, தனியார் மருத்துவமனைகளுக்கு கடிவாளம் போடும் வகையில் சமீபத்தில் விதிமுறைகள் திருத்தப்பட்டன.

    இந்நிலையில், மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அல்லல்பட்டு பெறும் பல சேவைகளை அவர்களின் வீட்டுக்கே தேடிச்சென்று அளிக்கும் திட்டத்தை டெல்லி அரசு இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பிறப்பு, இறப்பு, பென்சன், வருவாய், சாதி உள்ளிட்ட சான்றிதல்களை அரசு வீட்டுக்கே வந்து வழங்கும்.

    ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு மாற்றம் செய்தல், திருமண சான்றிதல், குடிநீர், கழிவுநீர் இணைப்பு ஆகிய 40 வகையான அரசு சேவைகள் மக்களின் வீடு தேடி வர உள்ளது. இணையதளத்தில் தேவையான தகவல்களுடன் பொதுமக்கள் விண்ணப்பத்தால் மட்டும் போதும்.



    இந்த திட்டத்திற்காக நவீன வசதிகளை கொண்ட 300 குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. புகைப்படம் எடுப்பது, கைரேகை பெறுவது, ஆவணங்களை வீட்டுக்கே வந்து பெறுவது உள்ளிட்ட பணிகளை இந்த குழுக்கள் மேற்கொள்ளும். இதற்காக, தனியார் ஏஜென்சிகளும் ஈடுபடுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டம் கடந்தாண்டு நவம்பர் மாதமே அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் முட்டுக்கட்டை போட்டதன் காரணமாக இழுபறியானது. சில திருத்தங்களுக்கு பிறகு மீண்டும் திட்டம் தயார் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டது.

    இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பொதுமக்கள் அலுவலகங்களில் காத்துகிடக்கும் நேரம் குறைவதுடன், வெளிப்படைத்தன்மை இருக்கும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    40 அரசு திட்டங்களுடன் விரைவில் மேலும் 60 திட்டங்கள் இணைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×