search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1996-ம் ஆண்டுக்கு பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரே அணியில் திரளும் எதிர்க்கட்சிகள்
    X

    1996-ம் ஆண்டுக்கு பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரே அணியில் திரளும் எதிர்க்கட்சிகள்

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி, அமித்ஷாவை வீழ்த்துவதற்காக 1996-ம் ஆண்டுக்கு பிறகு பாரதிய ஜனதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் திரள்கின்றனர். #KumaraswamySwearingIn
    புதுடெல்லி:

    1996-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தோல்வியை சந்தித்தது. அந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனால், பாரதிய ஜனதா கட்சி 161 இடங்களை கைப்பற்றி முதலிடத்தை பிடித்தது. காங்கிரஸ் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. மற்றொரு எதிர்கட்சியான ஜனதா தளம் 46 இடங்களில் வென்றிருந்தது.

    அப்போது தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியது. வாஜ்பாய் பிரதமர் ஆனார். ஆனால், அந்த ஆட்சியை நீடிக்க விடக்கூடாது என்பதற்காக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தன. காங்கிரஸ், ஜனதா தளம், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல மாநில கட்சிகள் ஒரே அணியில் திரண்டன. இதனால் எதிர்க்கட்சிகள் வரிசையில் அதிக உறுப்பினர்கள் இருந்தனர். 16 நாட்களே ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.

    இதற்கு பிறகு ஒரு போதும் எதிர்க்கட்சிகள் இதே போல் ஒரே அணியில் திரளவில்லை. இப்போது பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் 1996-ம் ஆண்டு போல் ஒரே அணியில் திரண்டு இருக்கின்றன.

    நேற்று பெங்களூரில் நடந்த குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் எதிர்கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய அணியாக கை கோர்த்து இருக்கிறார்கள்.


    நேற்றைய நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி, கர்நாடக முதல்- மந்திரி குமாரசாமி, ராஷ்டீரிய ஜனதா தளம் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், சரத் யாதவ், அஜித்சிங் ஆகியோர் ஒரே மேடையில் இருந்து கைகோர்த்து தங்கள் ஒரே அணியில் திரண்டு இருப்பதை காட்டினார்கள்.

    அதே நேரத்தில் நேற்றைய விழாவில் கலநது கொண்ட ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர்கள் அணிவகுப்பில் பங்கேற்கவில்லை.

    அவர்களும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக இருந்தாலும் காங்கிரசுடன் சேர்ந்து பாரதிய ஜனதாவை எதிர்ப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் கை கோர்த்து நிற்கவில்லை.

    அதே போல தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவும் இந்த அணியில் சேருவதற்கு தயக்கம் காட்டி நேற்றைய விழாவில் பங்கேற்கவில்லை. அவர் ஒரு நாள் முன்கூட்டியே வந்து வாழ்த்திவிட்டு சென்றார்.


    மம்தா பானர்ஜி சந்திரசேகரராவ் ஆகியோர் காங்கிரஸ் அல்லாத 3-வது அணியில் எதிர்கட்சிகள் ஒன்று திரள வேண்டும் என்று கருதுகிறார்கள். சந்திரபாபு நாயுடுவும் காங்கிரஸ் அணியில் இருப்பதற்கு தயக்கம் காட்டுகிறார்.

    மற்ற தலைவர்கள் அனைவரும் இப்போதே ஒன்று திரண்டுவிட்டார்கள். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் போது, அவர்களும் இந்த அணிக்கு வருவதற்கோ அல்லது அந்த அணியோடு இணைந்து செயல்படுவதற்கோ வாய்ப்பு உள்ளது.

    இந்த வகையில் மோடிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று திரளும் நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு நேற்றைய பெங்களூர் நிகழ்ச்சி தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அது நீடிக்குமா? பாரதிய ஜனதாவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் நிரந்தரமாக நிற்குமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

    இவ்வாறு எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேருவது பாரதிய ஜனதாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.

    மோடி- அமித்ஷா அணி இதை எப்படி தடுக்க போகிறது என்பது அவர்கள் வகுக்கும் வியூகங்களை பொருத்து அமையும். #KumaraswamySwearingIn #UnitedInVictory
    Next Story
    ×