search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் எப்போது போடப்படும் என்பதற்கு பதில் அளிக்க முடியாது: பிரதமர் அலுவலகம்
    X

    பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் எப்போது போடப்படும் என்பதற்கு பதில் அளிக்க முடியாது: பிரதமர் அலுவலகம்

    பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தபடி, பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் எப்போது போடப்படும் என்பது குறித்து பதில் அளிக்க முடியாது என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. #Modi #RTIAct #PMO
    புதுடெல்லி:

    கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்கும்போது, ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் மோகன் குமார் சர்மா என்பவர், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, மத்திய தகவல் ஆணையத்தில் ஒரு விண்ணப்பத்தை அளித்தார்.

    அதில், நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தபடி, பொதுமக்களின் வங்கி கணக்கில் தலா ரூ.15 லட்சம் எப்போது போடப்படும்? என்றும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி பத்திரிகைகளுக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி? என்றும் அவர் கேள்விகள் கேட்டிருந்தார்.

    இதுகுறித்து தலைமை தகவல் ஆணையாளர் ஆர்.கே.மாத்தூர் முன்பு விசாரணை நடந்தது. அப்போது, பிரதமர் அலுவலகத்தில் இருந்தும், ரிசர்வ் வங்கியில் இருந்தும் தனக்கு முழுமையான தகவல் கிடைக்கவில்லை என்று மோகன் குமார் சர்மா கூறினார்.

    அதற்கு தலைமை தகவல் ஆணையாளர் ஆர்.கே.மாத்தூர், “ரூ.15 லட்சம் எப்போது போடப்படும்?, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பத்திரிகைகள் முன்கூட்டியே அறிந்தது எப்படி? என்ற கேள்விகள், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 2(எப்) பிரிவுப்படி, ‘தகவல்’ என்ற வரம்புக்குள் வராது என்றும், எனவே, அவற்றுக்கு பதில் அளிக்க முடியாது என்றும் பிரதமர் அலுவலகமும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளன” என்று கூறினார்.

    மேலும், பிரதமர் அலுவலகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை தனக்கு திருப்தி அளிப்பதாகவும் ஆர்.கே.மாத்தூர் கூறினார்.  #Modi #RTIAct #PMO #tamilnews 
    Next Story
    ×