search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து பிரச்சினைகளுக்கும் ‘ஆதார்’ தீர்வு ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு கருத்து
    X

    அனைத்து பிரச்சினைகளுக்கும் ‘ஆதார்’ தீர்வு ஆகாது - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு கருத்து

    வங்கி மோசடிகள் உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் ‘ஆதார்’ தீர்வாக அமையாது என சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு கருத்து தெரிவித்தது.
    புதுடெல்லி:

    ஆதார் என்னும் 12 இலக்க அடையாள அட்டை எண், அரசு சேவைகளுக்கும், சமூக நல திட்டங்களுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

    இப்படி ஆதார் எண்களை இணைப்பதால், தனிநபர் பற்றிய ரகசியம் கசிய வாய்ப்பு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகள் எழுப்புகின்றனர்.

    அந்த வகையில், “ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயம் ஆக்கும் சட்டமும், பயோமெட்ரிக் முறையும் அரசியல் சாசனப்படி செல்லுபடி ஆகாது” என அறிவிக்க கோரி பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை தொடுத்து உள்ளனர்.

    அந்த வழக்குகள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த வழக்கில் நேற்று பல்வேறு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர்.

    மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.கோபால் ஆஜராகி வாதாடினார். அவர், “சேகரிப்பு மையங்களில் இருந்து ஆதார் தகவல்கள் எந்த விதத்திலும் கசிந்து விடாதபடிக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஆதார் மூலம்தான் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிற விளிம்பு நிலை மக்களுக்கு உணவு தானியங்களும், வீடுகளும், வேலை வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன; தனி நபர் உரிமை மிகக்குறைந்த அளவுக்கே பாதிக்கத்தக்க அளவில் அரசு எச்சரிக்கையாக செயல்பட்டு உள்ளது” என்று கூறினார்.

    நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆதார் தீர்வாக அமைகிறது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு நீதிபதிகள், வங்கி மோசடிகள் உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் ‘ஆதார்’ தீர்வாக அமையாது என உறுதிபட தெரிவித்தனர்.

    அப்போது அவர்கள், “எல்லா பிரச்சினைகளுக்கும் ஆதார் தீர்வாக அமையாது. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி மோசடிகள், வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மோசடியாளர்களால் நடத்தப்பட்டு உள்ளன. அப்படி இருக்கும்போது ஆதார் எப்படி பாதுகாப்பானது? யாருக்கு கடன் கொடுக்கிறோம் என்பதை வங்கியாளர்கள் அறிந்து இருக்கிறார்கள். வங்கி அதிகாரிகள், மோசடியாளர்களுடன் கூட்டுச்சதி செய்து செயல்பட்டு உள்ளனர். இதையெல்லாம் தடுத்து நிறுத்த ஆதார் சிறிய அளவில்தான் செயல்பட முடியும்” என கருத்து தெரிவித்தனர்.

    மேலும், “உண்பதற்கு உணவு தானியங்களும், வசிப்பதற்கு வீடுகளும் தேவைப்படுகிற நலிவு அடைந்த மக்களுக்கும், தனி நபர் உரிமைகள் உண்டு. அவை அரசால் மீறப்படக்கூடாது” எனவும் நீதிபதிகள் கூறினர். 
    Next Story
    ×