search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடனை திருப்பி செலுத்தாத 91 பேர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதை தடுக்க மத்திய அரசு திட்டம்
    X

    கடனை திருப்பி செலுத்தாத 91 பேர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதை தடுக்க மத்திய அரசு திட்டம்

    அதிக கடன் வாங்கி திருப்பி செலுத்தாத 91 பேர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
     புதுடெல்லி:

    கர்நாடக தொழில் அதிபர் விஜயமல்லையா மத்திய அரசு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இங்கிலாந்தில் தங்கி இருக்கும் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர பல முயற்சிகள் எடுத்தும் முடியவில்லை.

    இந்த நிலையில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது பங்குதாரர் மெகுல் கோக்ஷி ஆகியோர் சுமார் ரூ.13,500 கோடி பணத்தை வங்கிகளில் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர். அவர்களையும் இந்தியாவுக்கு கொண்டு வர முடியவில்லை.

    இவர்கள் மட்டும் அல்ல, இதேபோல் அதிகளவில் கடன் வாங்கி விட்டு அல்லது மோசடி செய்து விட்டு 31 தொழில் அதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி உள்ளனர்.

    எனவே, இவ்வாறு வங்கிகளில் மோசடி செய்து தப்பி ஓடுபவர்களை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இதன் முதல் கட்டமாக ரூ.100 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி செல்பவர்களின் இந்திய சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து ரூ.50 கோடிக்கு மேல் கடன் வாங்கி இருப்பவர்களுடைய பாஸ்போர்ட் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதே வங்கிகள் அந்த நபர்களிடம் இருந்து பாஸ்போர்ட் பற்றிய முழு விவரங்களையும் பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இப்போது அதிக கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் வாய்ப்பு இருப்பதாக சிலரை அடையாளம் கண்டுள்ளனர்.

    வங்கிகளில் அதிக கடன்கள் வாங்கியதுடன் அதை திருப்பி செலுத்தக் கூடிய சக்தி இருந்தும் கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் இருக்கும் நிறுவனங்களை ஆய்வு செய்தனர். இவ்வாறு 400 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த நிறுவனங்களின் அதிபர்கள் அல்லது தலைமை நிர்வாக அதிகாரிகள் 91 பேர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

    அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் பற்றிய விவரங்கள் வெளியுறவுத்துறை, பாஸ்போர்ட் அலுவலகம், விமான நிலையம், போலீஸ் துறை ஆகியவற்றுக்கு தெரிவித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக அதிகாரி ஒருவர் கூறும் போது, 91 பேரின் பட்டியலை தற்போது தயாரித்துள்ளோம். அதில் ஏற்கனவே தப்பி ஓடி விட்ட நிரவ் மோடி, மெகுல் கோக்ஷி, நிரவ் மோடியின் மனைவி ஆகியோர் பெயர்களும் உள்ளன.

    இந்த 91 பேரின் பட்டியல் முதற்கட்ட பட்டியல் ஆகும். அதை இன்னும் இறுதி செய்ய வேண்டி உள்ளது. அப்போது இந்த பட்டியலில் இருப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு இருக்கிறது என்று அவர் கூறினார்.

    மத்திய அரசுக்கு சொந்தமான வங்கிகளில் 7,564 தொழில் அதிபர்கள் 93 ஆயிரத்து 357 கோடி ரூபாயை திருப்பி செலுத்தாமல் இருப்பதாக வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. #tamilnews
    Next Story
    ×