search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலைகளை உடைக்கும் பா.ஜ.க.வினர் மீது கடும் நடவடிக்கை -  அமித் ஷா எச்சரிக்கை
    X

    சிலைகளை உடைக்கும் பா.ஜ.க.வினர் மீது கடும் நடவடிக்கை - அமித் ஷா எச்சரிக்கை

    தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபடும் பா.ஜ.க.வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா எச்சரித்துள்ளார். #Periyarstatue #BJP
    புதுடெல்லி:

    திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய மறுநாளே, கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது வைக்கப்பட்ட லெனின் சிலை அகற்றப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் பா.ஜ.க. மற்றும் கம்யூனிஸ்ட் தொண்டர்களிடையே மோதலையும் உருவாக்கி உள்ளது. லெனின் சிலை அகற்றம் தொடர்பாக, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார். அதில், ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என கூறியிருந்தார்.

    இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தின்  திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு வலுத்ததையடுத்து எச்.ராஜா தனது கருத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார். இன்று வருத்தம் தெரிவித்து பேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளார். எச்.ராஜாவின் கருத்திற்கு பா.ஜ.க. மேலிடம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சிலைகளை சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபடும் பா.ஜ.க.வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா எச்சரித்துள்ளார்.



    ‘தலைவர்களின் சிலைகள் உடைக்கப்படுவது துரதிர்ஷ்டமான சம்பவம். யாருடைய சிலையையும் அகற்றுவதை பா.ஜ.க. ஆதரிக்கவில்லை. அத்தகைய செயல்களில் ஈடுபடும் பா.ஜ.க.வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தமிழகம் மற்றும் திரிபுரா மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் பேசி உள்ளேன். மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே நமது முக்கிய குறிக்கோள்’ என்று அமித் ஷா கூறியுள்ளார். #Periyarstatue #BJP #tamilnews

    Next Story
    ×