search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு ஆக்க பிரதமர் மோடி யோசனை
    X

    விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு ஆக்க பிரதமர் மோடி யோசனை

    விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு ஆக்க மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு ஆக்க மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார்.

    டெல்லியில், ‘வேளாண்மை -2022: விவசாயிகள் வருவாயை இரட்டிப்பு ஆக்குதல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

    விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்க வேண்டுமானால், விவசாயத்தை முற்றிலும் சீர்திருத்த வேண்டும். மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

    யூரியாவின் தரம் உயர்த்தப்பட்டதால், குறைவான யூரியா போடுவதன் மூலம், உற்பத்தி பெருகி உள்ளது. இதனால், பணம் மிச்சம் ஆகியுள்ளது.

    மண்வள அட்டைகள் பயன்பாட்டுக்கு பிறகு, உற்பத்தி 6 சதவீதம் அதிகரித்து இருப்பதாக 19 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் 99 நீர்ப்பாசன திட்டங்கள், உரிய காலத்தில் நிறைவேற்றப்படும். இதற்காக, பட்ஜெட்டில் ரூ.80 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு அளிக்கும் கடன் அளவு ரூ.8 லட்சம் கோடியில் இருந்து ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் கடின உழைப்பால், கடந்த ஓராண்டில், பருப்பு உற்பத்தி 2 கோடியே 30 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

    சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்துவதன் மூலமும், வருவாயை பெருக்கலாம். நார் கழிவு, மூங்கில் கழிவு, அறுவடைக்கு பிறகு வயலில் எஞ்சி இருக்கும் கழிவுகள் ஆகியவற்றை நல்ல முறையில் பயன்படுத்தியும் வருவாயை பெருக்கலாம். இதுபற்றி மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 
    Next Story
    ×