search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோசனை"

    பெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார். #PetrolDiesel #PriceHike #Modi
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அதுபற்றி விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று 3-வது வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.

    கூட்டத்தில், சவுதி அரேபிய பெட்ரோலிய மந்திரி காலித் அல் பாலி, ஐக்கிய அரபு மந்திரி மற்றும் சர்வதேச முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



    மேலும், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். எரிசக்தி துறையில், வர்த்தகம் செய்ய உகந்த சூழ்நிலைக்காக கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை சர்வதேச எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:-

    கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியா போன்ற எண்ணெய் நுகர்வு நாடுகள், கடுமையான பொருளாதார சவால்களை சந்தித்து வருகின்றன. பணவீக்கம் உயருகிறது. இவ்விஷயத்தில், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் உதவி தேவை.

    வளரும் நாடுகளில், அதிக நிலப்பரப்பில் எண்ணெய் எடுக்கும் பணி நடக்கிறது. இதில், தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களில் வளர்ந்த நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும். எரிவாயு துறையில் வினியோக பணியில் தனியாரின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

    எண்ணெய் சந்தையில், எண்ணெய் விலையை எண்ணெய் உற்பத்தி நாடுகளே தீர்மானிக்கின்றன. போதுமான உற்பத்தி இருந்தபோதிலும், எண்ணெய் உற்பத்தி நாடுகள் கடைபிடிக்கும் தனித்துவமான சில நடவடிக்கைகளால், எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது. எண்ணெய் விலை குறைய எண்ணெய் உற்பத்தி நாடுகள் இன்னும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    மற்ற சந்தைகளில், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையே கூட்டு நிலவுகிறது. அதுபோல், எண்ணெய் சந்தையிலும் உற்பத்தி நாடுகளுக்கும், நுகர்வு நாடுகளுக்கும் இடையே கூட்டு நிலவினால், மீண்டு வரும் சர்வதேச பொருளாதாரம் ஸ்திரம் அடைந்து, விலை குறைய வாய்ப்புள்ளது.

    மேலும், எண்ணெய் உற்பத்தி நாடுகள், பணம் செலுத்தும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதன்மூலம், அந்தந்த நாடுகளின் நாணயத்துக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.  #PetrolDiesel #PriceHike #Modi 
    பசு பாதுகாவலர்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க தனிச் சட்டம் இயற்றவேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது.
    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் சில வன்முறைக் கும்பல் மாட்டிறைச்சி சாப்பிடும் அப்பாவி மக்களை குறி வைத்து கடுமையாக தாக்குவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. இவர்கள் பலரை அடித்துக் கொன்றும் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இப்படி வன்முறைக் கும்பல் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இத்தகைய தாக்குதல்களை தடுக்க தகுந்த வழிகாட்டுதல் நெறிமுறை களை பிறப்பிக்கவேண்டும் என்று கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மகாத்மா காந்தியின் கொள்ளுபேரன் து‌ஷார் காந்தி உள்பட பலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியதாவது:-

    பசு பாதுகாவலர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. திரளானவர்கள் ஒன்று கூடி அப்பாவி மக்கள் மீது பயங்கரமாக தாக்குதல் நடத்துவது புதிய சட்டவழி முறையாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

    இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தீர்வு காணும் முறைகள், தகுந்த தண்டனை ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம்.

    இதை மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் செயல்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். எந்த மாநில அரசும் இந்த வி‌ஷயத்தை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. யாராவது அராஜகத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனென்றால் எந்த வகையிலும் வன்முறையை அனுமதிக்க இயலாது. தனி நபர்கள் யாரும் சட்டத்தின் காவலர்களாக ஆகி விடவும் கூடாது.

    பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துபவர்கள் மற்றும் கொலை செய்யபவர்களை தண்டிக்கவும், அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவும் தனிச் சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(ஆகஸ்டு) 28-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இப்பிரச்சினை தொடர்பாக கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனைத்து மாநில அரசுகளுக்கும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் அப்பாவி மக்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது, நினைவு கூரத்தக்கது.  #Tamilnews #CowVigilantism #SupremeCourt
    திறமை வாய்ந்தவர்களுக்கு மத்திய அரசின் இணை செயலாளர் பதவி அளிக்கும் திட்டத்தின் கீழ், அரசு கல்வி நிறுவனங்களிலும் அவர்களை நியமிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி சத்யபால் சிங் கூறியுள்ளார். #SatyapalSingh
    புதுடெல்லி:

    பல்வேறு மத்திய அமைச்சகங்களில், இணை செயலாளர் அந்தஸ்துள்ள பதவிகளுக்கு திறமையும், செயல் நோக்கமும் கொண்டவர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தனியார் துறையை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தேச கட்டுமானத்தில் பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று முன்னணி நாளிதழ்களில் மத்திய அரசு விளம்பரம் செய்துள்ளது. இது, 3 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியிடம் ஆகும். இதற்கான சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த திட்டம், பா.ஜனதாவுடன் தொடர்பு உடையவர்களை அரசு நிர்வாகத்தில் நுழைக்கும் நோக்கம் கொண்டது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்நிலையில், கடும் எதிர்ப்பையும் மீறி, அரசு கல்வி நிறுவனங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சத்யபால் சிங் பேசியதாவது:-

    பல்வேறு மத்திய அமைச்சகங்களில், திறமை வாய்ந்தவர்களை இணை செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கும் திட்டம் நடந்து வருகிறது. இந்த திட்டத்தை அரசு கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அதாவது, அத்தகையவர்களை அரசு கல்வி நிறுவனங்களிலும் இணை செயலாளர் அந்தஸ்தில் நியமிக்க வேண்டும்.

    அப்படி செய்தால், கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம் மேம்பாடு அடையும். இதை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம்.

    அரசு கல்வி நிறுவனங்களுக்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இது, படிப்படியாக முடிவுக்கு வரும். அதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். இதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

    தொழில் துறையினர் எதிர்பார்க்கும் திறமையுள்ள மாணவர்களை உருவாக்கும் வகையில், புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக் கான புதிய பாடத்திட்டம், இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுவது அவசியம்.

    இவ்வாறு சத்யபால் சிங் பேசினார்.  #SatyapalSingh
    ×