search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் மீது ஷூ வீச்சு
    X

    ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் மீது ஷூ வீச்சு

    பீஜப்பூர் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் மீது இளைஞர் ஒருவர் ஷூ வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
    புவனேஷ்வர்:

    பீஜப்பூர் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் மீது இளைஞர் ஒருவர் ஷூ வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஒடிசா மாநிலம் பீஜப்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, அந்த மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கம்பாரியில் உள்ள பர்பாலி பிளாக்கில் பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இன்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது கூட்டத்தில் இருந்து திடீரென நவீன் பட்நாயக் மீது ஷூ வீசப்பட்டது. ஏதோ ஒரு பொருள் முதல் மந்திரியை நோக்கி வருவதை கண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சுதாரித்தனர். அவர்கள் துரிதமாக செயல்பட்டு நவீன் பட்நாயக் மீது விழாமல் தடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து, நவீன் பட்நாயக் மீது ஷூ வீசிய நபரை அங்கு குழுமியிருந்த மக்கள் தாக்கினர். அதில் காயமடைந்தவரை மக்களிடம் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது கஸ்டடியில் கொண்டு வந்தனர்.

    பிடிபட்ட அந்த இளைஞர் பத்மாபுர் பகுதியைச் சேர்ந்த கர்திக் மெஹர் என்பதும், அவர் சட்டைப் பையில் இருந்து பா.ஜ.க.வின் கொடி மற்றும் அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விசாரணையில், பீஜப்பூர் தொகுதியில் பா.ஜ.க. வெற்றிபெற முடியாது என்ற விரக்தியில் பா.ஜ.க.வை சேர்ந்த இளைஞர் தனது கோபத்தை இவ்வாறு வெளிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால், பா.ஜ.க.வினர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். முதல் மந்திரி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க., அந்த இளைஞர் குறித்து முழு விசாரணை நடைபெறாத நிலையில் எங்களை குறைசொல்வது ஏற்புடையதல்ல என் விளக்கம் அளித்துள்ளது.
    Next Story
    ×