search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி. இடைநீக்கம்
    X

    மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி. இடைநீக்கம்

    நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ராமச்சந்திர ராவை சபை விதி எண் 255-ன் படி அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நாள் முழுவதும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மாநிலங்களவை நேற்று காலையில் கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் எழுந்து, காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச தொடங்கினார். அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராமச்சந்திர ராவ் எம்.பி. சபையின் மையப்பகுதிக்கு சென்றார். பின்னர் மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா புறக்கணிக்கப்பட்டதை எதிர்க்கும் வகையில், ஆந்திராவுக்கு நீதி கேட்கும் வாசகங்கள் அடங்கிய பதாகை ஒன்றை ஏந்தியவாறு அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, ராமச்சந்திர ராவை இருக்கைக்கு செல்லுமாறு பலமுறை வலியுறுத்தினார். மேலும் அவரை தனது இருக்கைக்கு செல்வதற்கு வலியுறுத்துமாறு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம்நபி ஆசாத் மற்றும் ஆனந்த் சர்மாவிடம் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.

    எனினும் ராமச்சந்திர ராவ் தொடர்ந்து சபையின் மையப்பகுதியிலேயே நின்றிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த வெங்கையா நாயுடு சபை விதி எண் 255-ன் படி ராமச்சந்திர ராவ் எம்.பி.யை நாள் முழுவதும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். உடனே அவர் சபையை விட்டு வெளியேறினார். பின்னர் சபை நடவடிக்கைகள் சீராக நடந்தேறின. 
    Next Story
    ×