search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2016-17-ம் ஆண்டு இந்தியாவில் ரூ.4 லட்சம் கோடி அன்னிய முதலீடு: பிரதமர் மோடி பெருமிதம்
    X

    2016-17-ம் ஆண்டு இந்தியாவில் ரூ.4 லட்சம் கோடி அன்னிய முதலீடு: பிரதமர் மோடி பெருமிதம்

    2016-17-ம் ஆண்டு இந்தியாவுக்கு அன்னிய முதலீடாக ரூ.4 லட்சம் கோடி வந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
    கவுகாத்தி:

    2016-17-ம் ஆண்டு இந்தியாவுக்கு அன்னிய முதலீடாக ரூ.4 லட்சம் கோடி வந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

    அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் 2 நாள் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

    இதில் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்காய், அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால், அருணாசலபிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், 16 நாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் பிரபல தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

    8 வடக்கு கிழக்கு மாநிலங்களும் அஷ்டலட்சுமிகள் ஆகும். இந்த மாநிலங்கள் அனைத்தும் புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கான புதிய எந்திரமாக இருக்கும்.

    நாட்டின் அனைத்து துறைகளும், அனைத்து பகுதிகளும் சீரான வளர்ச்சி கண்டால்தான் இந்தியா முழுமையாக வளர்ச்சி பெற்றதாக அர்த்தம். இதனால்தான் கிழக்கு கொள்கையை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இதில் கிழக்காசிய நாடுகள் இந்தியாவின் கிழக்கு மாநில மக்களோடு தொடர்பு, வர்த்தகம், நட்புறவு மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களில் ரெயில்பாதை அமைப்பதற்காக ரூ.47 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த 2, 3 ஆண்டுகளில் இப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மேலும் 90 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்யும்.

    நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த மூன்றரை ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு தடைகளை உடைத்து பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போது இந்தியாவில் தொழில் தொடங்குவது மிகவும் எளிதாக்கப்பட்டு இருக்கிறது.

    2016-17-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவுக்கு மிக அதிக பட்சமாக 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார்ரூ.4 லட்சம் கோடி) அன்னிய நேரடி முதலீடு வந்துள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணி அதிகார எந்திரம் இயங்கும் முறையை மாற்றியமைத்து இருப்பதுடன் வேகமாக முடுக்கிவிட்டும் உள்ளது. எனவே அனைத்து திட்டங்களும் இலக்கு காலத்திற்குள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×