search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் மார்ச் 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
    X

    மு.க.ஸ்டாலின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் மார்ச் 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

    2011-ம் ஆண்டு நடந்த கொளத்தூர் சட்டசபை தொகுதி தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து சைதை துரைசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    2011-ம் ஆண்டு நடந்த கொளத்தூர் சட்டசபை தொகுதி தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து சைதை துரைசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மார்ச் 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

    கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



    அந்த மனுவில், ‘தேர்தலின் போது தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக மு.க.ஸ்டாலின் செலவு செய்துள்ளார். மேலும், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டார். இதற்கு அதிகாரிகளும் துணையாக இருந்தனர். எனவே, மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சைதை துரைசாமி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி விசாரித்த நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு பதில் மனு தாக்கல் செய்யுமாறு மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் மீதான விசாரணையை ஜனவரி மாதத்துக்கு (2018) ஒத்திவைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சுப்ரீம்கோர்ட்டுக்கு அனுப்பி வைக்குமாறு சென்னை ஐகோர்ட்டுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    அதன்படி நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு பட்டியலில் காணப்பட்டது. ஆனால் வேறு சில வழக்கு விசாரணை நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

    இந்த நிலையில் மனுதாரர் சைதை துரைசாமி தரப்பில் மூத்த வக்கீல் கிரி, வக்கீல் ஜெயந்த் முத்ராஜ் ஆகியோர் சுப்ரீம்கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி, ‘தங்கள் தரப்பில் அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. சென்னை ஐகோர்ட்டில் இருந்து இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்தரப்பில் விசாரணையை ஒத்திப்போட முயற்சிப்பதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்’ என்று நேற்று முறையிட்டனர்.

    அப்போது மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வெங்கட்ரமணி, பதில் தாக்கல் செய்ய சிறிது கால அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுத்தார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மு.க.ஸ்டாலின் 4 வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    மேலும் வழக்கு விசாரணையை வருகிற மார்ச் மாதம் 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
    Next Story
    ×