search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்கட்டணம் 30 சதவீதம் வரை உயருகிறது
    X

    மின்கட்டணம் 30 சதவீதம் வரை உயருகிறது

    மின்கட்டணம் 30 சதவீதம் வரை உயருகிறது என்றும், இதற்கான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பு(சி.ஐ.டி.யு.) தெரிவித்து இருக்கிறது.
    சென்னை :

    மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆண்டு மின்கட்டணத்தை உயர்த்த அரசு திட்டமிட்டு இருக்கிறது. 30 சதவீதம் வரை மின்கட்டணம் உயருகிறது. இதனால் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு சாதாரண மக்கள் மீது மின் கட்டண உயர்வு திணிக்கப்பட இருக்கிறது.

    இதனால் சாதாரண மக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். பாராளுமன்ற தேர்தல் வராமல் இருந்திருந்தால் முன்னரே கட்டணத்தை உயர்த்துவது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டு இருக்கும். தற்போது பாராளுமன்ற தேர்தல் முடிந்து விட்டது.

    அரசு விரைவில் மின் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடும். பொதுவாக மின் கட்டணத்தை அரசு உயர்த்தும் எண்ணம் இருந்தால், அது தொடர்பாக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.

    அந்த வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஒப்புதல் பெற்றுவிட்டதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன.



    மின் கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு 30 சதவீதம் வரை உயர்த்த அரசு திட்டமிட்டு இருக்கிறது. 30 சதவீதம், 47 சதவீதம் என 2 விதமாக கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்து இருந்தது. அதில் தற்போது 30 சதவீதம் என்பது உறுதியாகி இருக்கிறது.

    மின் கட்டண உயர்வுக்கு மின்வாரியத்தின் நஷ்டம் தான் காரணம் என்று மின்வாரியம் சுட்டிக்காட்டுகிறது.

    ஆனால் 2019-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் ரூ.7 ஆயிரத்து 760 கோடி நஷ்டத்தில் மின்வாரியம் இயங்குவதாக தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டின் மின்சார தேவை 16 ஆயிரத்து 300 மெகாவாட் ஆகும்.

    மொத்த தேவையில் 3-ல் ஒரு பங்கை வெளிச்சந்தையில் அநியாய விலைக்கு வாங்கினால் ஏன் நஷ்டம் வராது?. காற்றாலை மின் உற்பத்தி ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் 39 காசு என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதன் மூலம் 1,000 மெகாவாட் மின்சாரத்தை பெறுகிறோம். ‘பேங்கிங் சிஸ்டம்’ என்ற முறையில் உடனே மின் உற்பத்திக்கு பணம் வழங்காமல் தாமதமாக 5 ரூபாய் 60 காசு என்ற நிலையில் வழங்குகிறார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.800 கோடி நஷ்டம் வருகிறது. இப்படி செய்தால் ஏன் நஷ்டம் வராது?

    எண்ணூரில் இருந்த பவர் ஹவுஸ் இடிக்கப்பட்டது. அதற்கு அருகில் 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் கட்ட 2014-ல் ரூ.4 ஆயிரம் கோடிக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது. டெண்டர் எடுத்தவர் இந்த விலையில் தற்போது முடியாது என்று சொல்லிவிட்டார். 2019-ல் மீண்டும் ஒரு கம்பெனிக்கு ரூ.7 ஆயிரத்து 100 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள். இப்படி செய்தால் ஏன் நஷ்டம் வராது?.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×