search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே விபத்து -  சப்-இன்ஸ்பெக்டர் பலி
    X

    கோபி அருகே விபத்து - சப்-இன்ஸ்பெக்டர் பலி

    கோபி அருகே நள்ளிரவில் விபத்து மரத்தில் மீது கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பரிதாப சாவு நண்பருக்கு தீவிர சிகிச்சை

    கோபி:

    கோபியை அடுத்த கெட்டி செவியூரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ராபர்ட் (வயது56). இவர் கோபி அடுத்த சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஜேம்ஸ் ராபர்ட் பிரண்ட்ஸ் ஆப் போலீசை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் காரில் கெட்டி செவி ஊரிலிருந்து சிறுவலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை ஜேம்ஸ் ராபர்ட் ஓட்டி வந்தார்.

    நள்ளிரவு 2 மணி அளவில் கெட்டி செவியூர் அருகே கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரேஞ்சர் மில் எதிரே உள்ள ஒரு புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் ஜேம்ஸ் ராபர்ட் மற்றும் கார்த்திகேயன் இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக வந்தவர்கள் இதுகுறித்து கோபி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கோபி போலீசார் விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே சப் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ராபர்ட் இறந்து விட்டதாக தெரிவித்தார். கார்த்திகேயன் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இறந்த சப் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ராபர்ட்டுக்கு ரோசலின் என்ற மனைவியும், ஸ்டெபி இன்சென்டா என்ற மகளும் உள்ளனர்.

    ஜேம்ஸ் ராபர்ட் உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு கோபி போலீசார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×