search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருடிய 7 பவுன் நகையை அடகு வைத்த பெண்- நோட்டீசு வந்ததால் குட்டு வெளிப்பட்டது
    X

    திருடிய 7 பவுன் நகையை அடகு வைத்த பெண்- நோட்டீசு வந்ததால் குட்டு வெளிப்பட்டது

    ராஜபாளையம் அருகே திருடிய 7 பவுன் நகையை அடகு வைத்த பெண்ணுக்கு நோட்டீசு வந்ததால் குட்டு வெளிப்பட்டதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகில் உள்ள வடக்கு மலையடிப்பட்டியில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூங்கொடி (வயது 35). வீட்டிலேயே இட்லி மாவு வியாபாரம் செய்து வருகிறார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பூங்கொடி வீட்டில் இருந்த 7 1/2 பவுன் நகை திருடுபோனது. இது தொடர்பாக அவர் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியும் எந்த பலனும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று பூங்கொடி பக்கத்து வீட்டில் வசிக்கும் சீனியம்மாளுக்கு (35) ஒரு தனியார் அடகு நிறுவனத்தில் இருந்து நோட்டீசு வந்தது. அப்போது சீனியம்மாள் வீட்டில் இல்லாததால் பூங்கொடியின் சகோதரர் அந்த நோட்டீசை வாங்கியுள்ளார்.

    எதார்த்தமாக அவர் நோட்டீசை பார்த்த போது, அதில் அடகு வைத்த நகைக்கான வட்டியை செலுத்துமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அடகு வைத்ததற்கான நகை விவரங்களும் இருந்தன.

    அதை பார்த்த பூங்கொடியின் சகோதரருக்கு வீட்டில் காணாமல் போன நகையை அடகு வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இது தொடர்பான தகவல் ராஜபாளையம் வடக்கு போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் சீனியம்மாளிடம் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் நகையை திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×