search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை
    X

    பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை

    தஞ்சை அருகே பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #BJP #LokSabhaElections2019

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் (வயது 75). ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு திருமணமாகி 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார்.

    இவர் பிரதமர் மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இதனால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ஒரத்தநாடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தனியாகவே சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். செல்லும் இடங்களில் பார்ப்பவர்களை எல்லாம் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வாராம்.

    இந்த நிலையில் கோவிந்தராஜ் ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே நேற்று இரவு மோடியின் படத்தை கழுத்தில் போட்டு கொண்டு பா.ஜனதாவுக்கு ஆதரவாக தனியாக நின்று பிரசாரம் செய்தார். அங்குள்ள கடைக்காரர்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அப்போது அங்கு ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் கோபிநாத் (33) என்பவர் வந்தார். அவர் திடீரென மோடிக்கு ஆதரவாக எப்படி பிரசாரம் செய்யலாம்? என கூறி முதியவர் கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கோபிநாத் ஆத்திரம் அடைந்து கோவிந்தராஜை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாங்க முடியாமல் கதறினார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி கோவிந்தராஜ் மகள் அற்புத அரசு ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர்.

    மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட சமூக ஆர்வலரை அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்துக்கு திரண்டனர். இதையொட்டி ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  #BJP #LokSabhaElections2019

    Next Story
    ×