search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலுக்கும் விமானப்படை தாக்குதலுக்கும் தொடர்பில்லை - நிர்மலா சீதாராமன் பேட்டி
    X

    தேர்தலுக்கும் விமானப்படை தாக்குதலுக்கும் தொடர்பில்லை - நிர்மலா சீதாராமன் பேட்டி

    பாகிஸ்தானுக்குள் புகுந்து நமது விமானப்படை நடத்திய தாக்குதலுக்கும் நம் நாட்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கும் எவ்வித தொடர்புமில்லை என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். #NirmalaSitharaman
    சென்னை:

    சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதல் தொடர்பாக நிருபர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப் படைகள் நடத்திய தாக்குதலை ராணுவ நடவடிக்கையாக பார்க்க கூடாது. பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இயங்கி வரும் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் தொடர்பாக பல்வேறு முறை ஆதாரங்களை அளித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அரசை நாம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம்.

    ஆனால், அவர்கள் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் மேலும் ஒரு பெரிய தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் பாலகோட் பகுதிக்குள் புகுந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.



    மிகவும் துல்லியமாக நமது விமானப்படைகள் நடத்திய இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் அந்நாட்டை சேர்ந்த பொதுமக்களில் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை தொடர்பாக பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இந்த தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இதில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை.

    எனவே, பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்பாக கணக்கு கேட்பவர்களுக்கு நான் அளிக்கும் ஒரேபதில் என்னவென்றால், வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்புதான் இந்தியாவின் நிலைப்பாடு என்பதாகும்.

    இதற்குமேல் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க ஏதுமில்லை. அபிநந்தன் மீண்டும் போர் விமானம் இயக்குவாரா என்பது குறித்து மருத்துவர்களும், விமானப்படை அதிகாரிகளும் முடிவெடுப்பார்கள். இந்திய விமானப்படை நடத்திய இந்த தாக்குதலுக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. #IAFairstrike #Loksabhaelections #NirmalaSitharaman
    Next Story
    ×