search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமமுக வேட்பாளர் பட்டியல் 28-ந்தேதி வெளியீடு: டிடிவி தினகரன் அறிவிப்பு
    X

    அமமுக வேட்பாளர் பட்டியல் 28-ந்தேதி வெளியீடு: டிடிவி தினகரன் அறிவிப்பு

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியல் வருகிற 28-ந்தேதி வெளியிட உள்ளதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். #TTVDhinakaran #AMMK
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் நேற்று மாலை ஓமலூரில் தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் அவர் மேச்சேரி, குஞ்சாண்டியூர், மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம், இரும்பாலை உள்ளிட்ட இடங்களில் திறந்தவேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தார்கள். ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க கூடாது என கோர்ட்டுக்கு சென்றவர்கள் மற்றும் சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கக்கூடாது என்று கூறியவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள். கூட்டணி என்ற பெயரில் கூத்தடிக்கிறார்கள்.

    நீங்கள் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் பெரிய கட்சிகள் இல்லாமல் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். அதே நேரத்தில் எங்களுக்கு கூட்டணி எதற்கு, ஜெயலலிதாவின் தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள். நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் மேட்டூர் அணையின் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றுவோம். இதன் மூலம் மேச்சேரி பகுதியில் உள்ள குளங்களை நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னம் இருந்தும், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். எங்களுக்கு பயந்து தானே கூட்டணி சேர்க்கிறார்கள்.


    பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா அவரது கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசுவதற்காக தமிழகம் வந்து சென்று இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று நினைக்கிறோம். 2 கட்சிகளுடன் கூட்டணி பேசிக்கொண்டு இருக்கிறோம். இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம். வருகிற 28-ந்தேதி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளோம்.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி அணி என்பதில் முதல் அணியாக இருக்கப்போவது அ.ம.மு.க.தான். மக்கள் விமர்சிக்காத கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். முதல்-அமைச்சர் வேட்பாளர் என்றும், மாற்றம், ஏமாற்றம் என்று அறிவித்து போட்டி போட்டுக்கொண்டு பிரசாரம் செய்தனர். அவரே வெற்றி பெறாத நிலையில் பெரிய கட்சி என்று நினைக்கிறார்கள்.

    இந்த தேர்தலில் மாற்றம் கொண்டு வருவோம். சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்கக்கூடாது என்று தே.மு.தி.க. தலைவர் சொன்னார். எனவே அவர்களுடன் கூட்டணியில் செல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #AMMK
    Next Story
    ×