search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக எம்.பி. ராஜேந்திரன் மரணம்- முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
    X

    அதிமுக எம்.பி. ராஜேந்திரன் மரணம்- முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

    திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி. ராஜேந்திரன்(62) மரணமடைந்தார். #RajendranMP #ADMK
    திண்டிவனம்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு விருந்து அளிக்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று இரவு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த விருந்து நிகழ்ச்சி திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்னைக்கு சென்று விட்டனர்.

    ராஜேந்திரன் எம்.பி. திண்டிவனத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை 6 மணிக்கு கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். காரை அருமைச்செல்வம் என்பவர் ஓட்டினார்.

    ராஜேந்திரன் எம்.பி. யுடன் அவரது உறவினர் தமிழ்ச்செல்வன் சென்றார். திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை திண்டிவனம் பகுதியில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ராஜேந்திரன் எம்.பி. கார் திண்டிவனம் போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பனி மூட்டம் காரணமாக சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த ராஜேந்திரன் எம்.பி., கார் டிரைவர் அருமைச்செல்வம், தமிழ்ச் செல்வன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். திண்டிவனம் போலீசார் அவர்களை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ராஜேந்திரன் எம்.பி. பரிதாபமாக இறந்தார்.

    காயம் அடைந்த அருமைச் செல்வம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் திண்டிவனம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்தில் இறந்த ராஜேந்திரன் எம்.பி.யின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ராஜேந்திரன் எம்.பி. இறந்த தகவல் அறிந்ததும் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

    ராஜேந்திரன் எம்.பி.யின் சொந்த ஊர் திண்டிவனம் அருகே உள்ள ஆதனப்பட்டு. சாந்தா என்ற மனைவியும், விக்னேஷ்வரன் என்ற மகனும், திவ்யா, தீபிகா ஆகிய மகள்களும் உள்ளனர்.



    ராஜேந்திரன் எம்.பி. மரணத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது அனுதாபசெய்தி வருமாறு:-

    விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ராஜேந்திரன் இன்று அதிகாலை சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனையும், பெரும் துயரமும் அடைந்தேன்.

    எஸ். ராஜேந்திரன் கட்சித் தலைமையின் மீது பற்றும், பாசமும், கழக கொள்கைகளின் மீது உறுதியும் கொண்டவர். பல ஆண்டுகளாக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் நலன்களுக்காக பாடுபட்டவர். அனைவரிடமும் விருப்பு, வெறுப்பின்றி அன்புடன் பழகும் பண்பாளர். இவர் கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர். தொகுதி மக்களின் பேரன்பைப் பெற்றவர். ராஜேந்திரனின் இழப்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும்.

    ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RajendranMP #ADMK #EdappadiPalaniswami
    Next Story
    ×