search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு மருத்துவக் கல்லூரிகளில் 345 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்கும்
    X

    அரசு மருத்துவக் கல்லூரிகளில் 345 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்கும்

    அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் 345 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. #MBBS #MedicalEducation

    சென்னை:

    தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

    புதிதாக கரூரில் அரசு மருத்துவ கல்லூரி தொடங்க நிதி ஒதுக்கி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மருத்துவ கல்வி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் 23 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு செயலாற்றி வருகிறது.

    ஒரு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க 400 கோடி ரூபாய் செலவிட வேண்டிய நிலை உள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதின் மூலம் எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வருடம் கடந்த ஆண்டை காட்டிலும் 345 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 95 எம்.பி.பி.எஸ். இடங்களும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 இடங்களும் அதிகரிக்க வேண்டும் என மருத்துவ கவுன்சிலிடம் அரசு முறையிட்டு உள்ளது. அதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கூடுதல் இடங்களை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா? என இந்திய மருத்துவ கவுன்சில் பல்வேறு கட்டமாக ஆய்வு செய்துள்ளது.

    அதனால் இந்த வருடம் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

    இது தவிர 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக இடங்கள் கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில் இதன் மூலம் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும் கரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கினால் அங்கு 100 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 2,900 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கின்றன.

    இதுதவிர கூடுதலாக 345 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு இடங்கள் கடந்த ஆண்டு வரை 1,250 இருந்தன. இந்த வருடம் கூடுதலாக 112 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MBBS #MedicalEducation

    Next Story
    ×