search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை
    X

    பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை

    பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரிவிக்கக்கோரி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    குன்னம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா காங்கையன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் உத்தாண்டம். இவருடைய மகன் உதயநிதி(வயது 17). இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கியிருந்து பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் உதயநிதி நேற்று முன்தினம் இரவு பள்ளி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உதயநிதியுடன் அறையில் தங்கி இருக்கும் மாணவர்கள் அங்கு சென்று பார்த்தபோது உதயநிதி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் கூறினர். இதையடுத்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த மாணவனின் உறவினர்கள் உதயநிதி இறந்ததற்கான காரணம் தெரிவிக்கக்கோரி பெரம்பலூர்- அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த மறியலால் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் விசாரணையில், உதயநிதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 474 மதிப்பெண் பெற்றுள்ளார். இருப்பினும் தற்போது புதிய பாடதிட்டத்தில் அதிக மதிப்பெண் எடுக்கவில்லை. இதனால் கடந்த வாரம் வந்த அவரது தாய் தேன்மொழி நன்றாக படிக்க வேண்டும் என உதயநிதியை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் உதயநிதி தங்கி இருந்த 6 மாணவர்களின் பெற்றோர்கள் வந்து அவர்களை பார்த்து சென்றதாகவும், அப்போது உதயநிதி விடுதி அறை தோழனின் தந்தையிடம் செல்போன் வாங்கி தனது தாய், தந்தையிடம் பேசியதாகவும், அதன் பின்னர் சோகத்துடன் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த மாணவர் உதயநிதியின் உடலை பார்ப்பதற்கு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் நேற்று மதியம் வந்தனர். அப்போது மாணவர் உதயநிதி சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரேத பரிசோதனை மையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுகையை கைவிட வைத்தனர். பின்னர் மாலையில் டாக்டர்கள் உதயநிதியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து உதயநிதியின் உடலை அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×