search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் இன்று ஒரே நாளில் பிரபல ரவுடிகள் உள்பட 27 பேர் அதிரடி கைது
    X

    சேலத்தில் இன்று ஒரே நாளில் பிரபல ரவுடிகள் உள்பட 27 பேர் அதிரடி கைது

    சேலத்தில் இன்று ஒரே நாளில் பிரபல ரவுடிகள் உள்பட 27 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகரில் குற்றங்களை குறைக்கும் பொருட்டு, போலீஸ் கமி‌ஷனர் சங்கர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்.

    அந்த வகையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் யார்? யார்? என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து போலீசார், ரவுடிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக இன்று குற்றப்பின்னணி உடைய தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அன்னதானப்பட்டியை சேர்ந்த ஜவகர், வளத்திகுமார், சின்னதிருப்பதியை சேர்ந்த பிளேடு செல்வம் என்கிற பன்னீர்செல்வம், அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் என்கிற மாட்டுக்கார சரவணன், அஸ்தம்பட்டி கன்னாங்காட்டை சேர்ந்த பிரதாப், வீராணம் பள்ளிப்பட்டியை சேர்ந்த நாட்டாமை செல்வம் உள்பட 27 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் போலீஸ் துணை கமி‌ஷனர் தங்கதுரை அஸ்தம்பட்டி, குமாரசாமி, வின்சென்ட் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் ரவுடிகளுடைய வீடுகளுக்கு சென்று எச்சரித்தார். இனிமேல் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவீர்கள் என கூறினார்.

    அப்போது பயந்து போன பெற்றோர்கள் எங்கள் மகனை விட்டு விடுங்கள். பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் இடையூறு செய்யமாட்டார்கள், குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள் எனக் கூறி கதறி அழுதனர்.

    இதைபோல் துணை கமி‌ஷனர் சியாமளாதேவி கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி. காலனி, கஸ்தூரிபாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ரவுடிகளை எச்சரித்தார். திருந்தி வாழுமாறும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    கைது செய்யப்பட்ட ரவுடிகள் 27 பேர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரே நாளில் பிரபல ரவுடிகள் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதுமட்டுமின்றி ரவுடிகள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து போலீசார் கூறுகையில், குற்றப் பின்னணி உடைய நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் குற்றமில்லாத மாநகரமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தனர்.

    Next Story
    ×