search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் அரசு ஊழியர்கள் போராட்டம் - 2,200 பேரை குண்டுக்கட்டாக போலீசார் தூக்கிச் சென்றனர்
    X

    மதுரையில் அரசு ஊழியர்கள் போராட்டம் - 2,200 பேரை குண்டுக்கட்டாக போலீசார் தூக்கிச் சென்றனர்

    மதுரையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் 2,200 பேரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். #JactoGeo
    மதுரை:

    புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதிய பணியாளர்களை நியமிக்கக்கூடாது என்பன உள்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் (ஜாக்டோ-ஜியோ) கடந்த 22-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

    போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும், இல்லையெனில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்தது. இருப்பினும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் பணிக்கு திரும்பாத மதுரை மாவட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று காலை முதலே கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை அருகே திரண்டனர். நேரம் செல்லச் செல்ல எண்ணிக்கை அதிகரித்தது.

    போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஏராளமான ஊழியர்கள் திரண்டதும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

    அவர்களை போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். இதனால் போலீசாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வேன் மற்றும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்றனர். மொத்தம் 2,200 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #JactoGeo
    Next Story
    ×