search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம்- கிராம மக்கள் இணைந்து நடத்த மதுரை ஐகோர்ட் அறிவுரை
    X

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விவகாரம்- கிராம மக்கள் இணைந்து நடத்த மதுரை ஐகோர்ட் அறிவுரை

    அவனியாபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டை நடத்த முன்வர வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தியுள்ளது. #HCMaduraiBench #Jallikattu
    மதுரை:

    மதுரை, அவனியாபுரத்தை சேர்ந்த கண்ணன் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், "மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

    இதில், மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்பர். இந்த ஆண்டும் வழக்கம் போல் ஜனவரி 15-ல் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதியும், தேவையான காவல்துறை பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

    இந்த நிலையில், மேலும் சிலர் வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

    அதில், "அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியிருப்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருந்து வரும் நிலையில், கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை.

    யாரையும் கலந்தாலோசிக்காமல் தனது குடும்ப விழாபோல் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார்.


    இந்த நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டினை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், ஆர்வமும், பங்கெடுப்பும் குறையும். எனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக்குழுவை அமைத்து ஜல்லிக்கட்டினை நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெக்தீஷ் சந்திரா, ஜல்லிக்கட்டு சம்பந்தமான அனைத்து வழக்குகளையும் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 10-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக போராட்டம் நடத்தி அனுமதி பெறப்பட்டது. எனவே ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதிக்க விரும்பவில்லை.

    அவனியாபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டை நடத்த முன்வர வேண்டும். ஜல்லிக்கட்டு விழா கமிட்டியை ஐகோர்ட்டு நியமிக்கும்.

    இது தொடர்பான விதிமுறைகளை ஆலோசிக்க இன்னும் 1 மணி நேரத்தில் மதுரை கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். #HCMaduraiBench #Jallikattu
    Next Story
    ×