search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அருகே பணம் கேட்டு மிரடிட்டிய ரவுடி வெட்டிக்கொலை
    X

    கரூர் அருகே பணம் கேட்டு மிரடிட்டிய ரவுடி வெட்டிக்கொலை

    கரூர் அருகே பணம் கேட்டு மிரட்டிய ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பேக்கரி உரிமையாளர் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை செவனப்பாறை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 37). நேற்றிரவு இவர் அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் கூட்டுறவு சேமிப்பு கிடங்கு அருகே தலையில் அரிவாள் வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

    உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரன் இறந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் கரூர் ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன், குளித்தலை டி.எஸ்.பி. சுகுமார், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மகேஸ்வரனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    மேலும் மகேஸ்வரன் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது.

    மகேஸ்வரன் மீது கர்நாடகா மாநிலம் மற்றும் நாமக்கல், சேலம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அவ்வப்போது செல்லும் மகேஸ்வரன் அங்கு திருட்டில் ஈடுபட்டு விட்டு பின்னர் ஊருக்கு திரும்பி வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த சம்பவங்களில் அடிக்கடி கைதாகி ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.

    இந்தநிலையில் கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை சரவணபுரத்தை சேர்ந்த பிச்சை (33) என்பவர் அய்யர்மலை உள்ளிட்ட 4 இடங்களில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகேஸ்வரன் ரூ.1.50 லட்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

    ஆனால் அவர் ரூ.10 ஆயிரம் மட்டும் தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் மகேஸ்வரன் ரூ.1.50 லட்சத்தை தரவேண்டும் என்றும், இல்லையென்றால் தொழில் செய்ய விட மாட்டேன் என்று மிரட்டியுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மகேஸ்வரனை தொடர்பு கொண்டு பேசிய பிச்சை, ரூ.1.50 லட்சம் பணம் தருவதாகவும், செவனப்பாறை நுகர்பொருள் கூட்டுறவு சேமிப்பு கிடங்கு அருகே வந்து பணத்தை வாங்கி கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு மகேஸ்வரன் சென்றுள்ளார். அதன் பிறகே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதனால் பண பிரச்சினையில் மகேஸ்வரனுக்கும், பிச்சைக்கும் ஏற்பட்ட தகராறில் பிச்சை அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மகேஸ்வரனை அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக பிச்சை உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மகேஸ்வரன் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    கொலை செய்யப்பட்ட மகேஸ்வரனுக்கு சரஸ்வதி என்ற மனைவியும், யஷ்வந்த் என்ற மகனும் உள்ளனர். பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    Next Story
    ×