search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டை அருகே புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
    X

    முத்துப்பேட்டை அருகே புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

    முத்துப்பேட்டை அருகே புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் கஜா புயலின் கோரதாண்டவத்தால் இப்பகுதி மக்கள் வீடுகள், உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வருவாய்த்துறையினர் கணக்கீடு செய்தனர். இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் குடும்பங்கள் தங்களுக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் புயல் பாதிப்பு ஏற்பட்டு 45நாட்கள் கடந்தும் இன்னும் இப்பகுதி மக்களுக்கு அரசின் எந்தவிதமான நிவாரணமும் வழங்கவில்லை.

    இந்தநிலையில் அருகில் உள்ள மலையாகணபதி நகர் பகுதி மக்களுக்கு நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதனால் அதிருப்தியடைந்த இப்பகுதி மக்கள் எங்களுக்கும் உடன் நிவாரண பொருட்கள் வழங்கவேண்டும் எனக்கோரி கீழக்காடு சுந்தரம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டி.எஸ்.பி. இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, மற்றும் வருவாய்த்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைவருக்கும் டோக்கன் விநியோகம் செய்து நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பட்டுக்கோட்டை- முத்துப்பேட்டை சாலை மற்றும் முத்துப்பேட்டை- அதிராம்பட்டிணம் சாலையில் மாலை 3 மணிமுதல் இரவு 7 மணி வரை சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×