search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எனக்கு வாழ பிடிக்கவில்லை- எச்.ஐ.வி. ரத்ததானம் செய்த வாலிபர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பு
    X

    எனக்கு வாழ பிடிக்கவில்லை- எச்.ஐ.வி. ரத்ததானம் செய்த வாலிபர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பு

    எச்.ஐ.வி. ரத்தத்தை தானமாக வழங்கிய வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #HIVBlood #PregnantWoman

    ராமநாதபுரம்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் செலுத்தப்பட்ட ரத்தம், அவருக்கு எச்.ஐ.வி. தொற்றை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த ரத்தம் ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்டது என தெரியவந்தது.

    தானமாக பெறப்பட்ட ரத்தத்தை முறையாக பரிசோதிக்காத ரத்த வங்கி ஊழியர் வளர்மதி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் ரமேஷ், ஆலோசகர் கணேசன் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு வரப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் எச்.ஐ.வி. தொற்று ரத்தத்தை தானமாக வழங்கியவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் என தெரியவந்தது. அவர் சிவகாசி பட்டாசு ஆலையில் வேலை பார்த்த போது தனது உறவு பெண்ணுக்காக ரத்ததானம் வழங்கி உள்ளார்.

    ஆனால் அந்த ரத்தம் உறவுப்பெண்ணுக்கு வழங்கப்படாமல் சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் மதுரையில் ரத்த பரிசோதனை செய்த போது அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    உடனடியாக சிவகாசி ரத்த வங்கியை தொடர்பு கொண்டு இதனை தெரிவித்ததோடு, தான் கொடுத்த ரத்தத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அதற்கு முன்பாகவே அந்த ரத்தம் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டு விட்டது. இதனை மருத்துவர்கள் தெரிவித்தவுடன் வாலிபர் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் கர்ப்பிணி பெண் பாதிப்புக்குள்ளாகி விசாரணை பெரிதானது. வாலிபரிடம் மருத்துவர்கள், போலீசார் விசாரித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்து (வி‌ஷம்) குடித்து மயங்கினார்.

    அவரை பெற்றோர் மீட்டு கமுதி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி பெற்றதும் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதை அறிந்ததும் மனிதாபினமானத்தோடு, ரத்த வங்கிக்கு சென்று தானாக முன்வந்து அதனை தெரிவித்த எனது மகனை, தற்கொலை முடிவுக்கு மற்றவர்கள் தள்ளியிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என்று வாலிபரின் தந்தை தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வாலிபரை பலரும் சந்தித்து கேள்வி கேட்டுள்ளனர். இதனால் மீண்டும் மனவேதனைக்கு ஆளான அவர், நான் வாழ விரும்பவில்லை. சாகப் போகிறேன் எனக்கூறி கொண்டு தனது உடலில் பொருத்தப்பட்டு இருந்த மருத்துவ உபகரணங்களை பிடுங்கி எறிந்தார். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து டாக்டர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வாலிபரை பிடித்து வந்து மீண்டும் சிகிச்சையை தொடங்கினர்.

    மேலும் வாலிபர் மீண்டும் தற்கொலைக்கு முயலக்கூடும் என்பதால் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி அந்த வாலிபர் பாதுகாப்புடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டதும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #HIVBlood #PregnantWoman 

    Next Story
    ×