search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்- நிர்மலா சீதாராமன்
    X

    புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்- நிர்மலா சீதாராமன்

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். #NirmalaSitharaman #GajaCyclone
    புதுக்கோட்டை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வேதாரண்யம், நாகை, கோடியக்கரை பகுதிகளை நேற்று பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

    இதையடுத்து இன்று இரண்டாவது நாளாக அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சையில் இருந்து காரில் அவர் நேராக நெடுவாசல் கிராமத்திற்கு சென்றார். அங்கு அதிக அளவிலான தென்னை, வாழை, மா, பலா, கொய்யா மரங்கள் சாய்ந்தன.

    அதேபோல் ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்திருந்தன. அவற்றை பார்வையிட்ட நிர்மலா சீதாராமனிடம் அப்பகுதி மக்கள் தங்கள் மறுவாழ்விற்காக உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    பின்னர் அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் டெல்டா மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று இரண்டாவது நாளாக ஆய்வு செய்கிறேன். ஏராளமான மரங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

    பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும். குறிப்பாக பலர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் புதிய வீடுகள் கட்டித்தரப்படும், இந்த திட்டத்தின்கீழ் ஏராளமானர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது.

    மத்திய அரசுக்கு அளிக்கப்படும் பெயர் பட்டியல் படி அவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் பெயர்களை மாவட்ட கலெக்டரிடம் தாங்களாகவே கொடுக்க வேண்டும். இதுவரை கொடுக்காதவர்கள் உடனே கலெக்டரை சந்தித்து தகவல்களை கொடுங்கள்.

    தென்னை மரங்கள் சாய்ந்துள்ளது மிகவும் விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. தென்னங்கன்று என்ற வார்த்தையை தென்னைக்கு மட்டுமே நாம் குறிப்பிடுகிறோம். வேறு எந்த இடத்திலும் இந்த வார்த்தையை நாம் கூறுவது கிடையாது. முதலில் சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதன் பிறகு தென்னங்கன்றுகள் நடப்படுவதற்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்யும். ஆந்திரா, ஒடிசா, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்தும் ராணுவ கப்பல்கள் மூலம் தென்னங்கன்றுகளை மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் கொண்டு வர நான் நடவடிக்கை எடுப்பேன்.

    தென்னங்கன்றுகள் வளர்வதற்கு 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் அதன் ஊடுபயிராக கிழங்கு வகைகள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யலாம். அதனை அரசே கொள்முதல் செய்யும்.


    பிரதமர் அறிவிப்பின் படி மத்திய அரசின் நிபுணர் குழு புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளது. அவர்களும் தேவையான உதவிகளை பிரதமரிடம் எடுத்துக்கூறி செய்வார்கள். நானும் பிரதமரிடம் நேரில் தெரிவித்து பல்வேறு உதவிகளை செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

    புயல் பாதித்த மாவட்டங்களில் மண்எண்ணை தட்டுப்பாடின்றி கிடைக்க பெட்ரோலியத்துறை மந்திரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அனுப்பப்பட்டுள்ள மண்எண்ணையை மாநில அரசு தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மின் கம்பங்கள் முற்றிலும் சாய்ந்துள்ளன. இதனால் நகர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருவதை நான் கண்கூடாக பார்த்தேன். மின் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மாநில அரசும் தேவையான முயற்சிகளை செய்து வருகிறது. நாகப்பட்டினத்தில் நேற்று மின்சாரத்துறை அமைச்சர் என்னை நேரில் சந்தித்து சீரமைப்பு பணிகள் குறித்து விபரங்களை தெரிவித்தார்.

    அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் மின் சப்ளை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தஞ்சாவூர் தான் நாட்டிற்கே நெற்களஞ்சியம் ஆகும். நாடு பஞ்சமில்லாமல் இருக்க டெல்டா விவசாயிகள் தான் காரணம். எனவே இந்த பாதிப்பை கண்டு மனம் தளர்ந்து விடக்கூடாது. யாரும் நம்பிக்கை இழந்து விடக்கூடாது.

    உங்களுக்கு கேள்வி கேட்க உரிமைகள் உண்டு. ஏன் வரவில்லை என்று நீங்கள் கேட்கலாம். கஷ்டமான இந்த சூழ்நிலையில் உங்களின் கேள்வி நியாயமானதுதான். ஏற்கனவே இங்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்து ஆய்வு செய்திருக்கிறார். அவர் என்னை விட மூத்தவர்.

    தைரியமாக இருங்கள். புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்து உதவிகளும் செய்யப்படும். விவசாய காப்பீட்டு திட்டத்தின் கீழ் இன்னும் காப்பீட்டு தொகையை செலுத்தாதவர்களுக்கு மாநில அரசே அந்த தொகையினை செலுத்திவிட்டு, அதன் பின்னர் காப்பீட்டு தொகை வரும்போது பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #BJP #NirmalaSitharaman #GajaCyclone
    Next Story
    ×