search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
    X

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

    திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். #GajaCyclone #Minister #RajendraBalaji
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மன்னார்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டு பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு குடி தண்ணீர், பால் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

    மன்னார்குடி மக்களுக்கு சிவகாசியில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்ட சுத்திகரிப்பு குடிநீரை பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

    மேலும் சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளையும், சாலையோரம் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தி வரும் பணிகளையும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பார்வையிட்டு ஆய்வுசெய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள பிருந்தாவன், உப்புகார தெரு, தேவர் நகர், பாமினி, கர்ணாவூர், வேட்டைத்திடல், அரிச்ச புரம், தேவங்குடி, கீழாள வந்தசேரி, மேலாளவந்த சேரி, பச்சைகுளம், அனுமந்தபுரம், ரிஷியூர் மற்றும் நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகத்தையும் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் நறுமணப்பால், பிஸ்கெட் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் அமைச்சர் வழங்கினார்.

    அப்போது பொதுமக்களிடம் அமைச்சர் பேசும்போது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு சார்பாக நிவாரணம் கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் அதிகாரிகளின் ஆய்வு மீட்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து நீடாமங்கலத்தில் புயலால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகளை அமைச்சர் வழங்கினார். முகாமில் பொதுமக்களோடு அமர்ந்து அமைச்சர் சாப்பிட்டார். நிகழ்ச்சியில் ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #GajaCyclone #Minister #RajendraBalaji
    Next Story
    ×