search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி நாளை பார்வையிடுகிறார்
    X

    கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி நாளை பார்வையிடுகிறார்

    கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பார்வையிடுகிறார். #edappadipalanisamy #gajacyclone #heavyrain
    சென்னை:

    ‘கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

    சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும், 40 ஆயிரம் மின் கம்பங்களும் சாய்ந்தன. மேலும் சுமார் 350 மின்மாற்றிகளும் சேதம் அடைந்து உள்ளன. இதுதவிர 1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

    இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

    புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணியில் 12 ஆயிரத்து 500 மின்துறை பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    தற்போது பல்வேறு இடங்களில் உள்ள 493 நிவாரண முகாம்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    தொற்று நோய் பரவாமல் தடுக்க 372 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் 1,014 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்த கூடுதலாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதல்-அமைச்சர் பழனிசாமி நாளை பார்வையிடுகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார். #edappadipalanisamy #gajacyclone #heavyrain
    Next Story
    ×