search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் விபத்துக்களை தடுப்பதில் முன்னோடி மாநிலமாக உள்ளது- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
    X

    தமிழகம் விபத்துக்களை தடுப்பதில் முன்னோடி மாநிலமாக உள்ளது- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

    விபத்து தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #edappadipalaniswami #RoadAccidents
    கோவை:

    கோவையில் உயிர் அமைப்பை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

    சாலை விதிகளை மதிக்காமல் நடந்து கொள்வதும், மிதம் மிஞ்சிய வேகமும், குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுவதும் தான் 70 சதவீத விபத்துக்களுக்கு காரணம் என்கிறது புள்ளி விபரம். ஹெல்மெட் அணிவது, சீட் பெல்டுகளை மாட்டி கொள்வது போன்ற அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை கூட கருத்தில் கொள்ளாத பயணிகளின் அலட்சியம் மரணம், பெருங்காயம், நிரந்தர ஊனம் ஆகியவற்றிற்கு இட்டு செல்கிறது.

    வாகனங்களை இயக்குவோர்கள், தங்களது பொறுப்புணர்ச்சியை உணர்ந்தால் இன்றி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. சாலை பாதுகாப்பு விதிகளும், சாலை பொறுப்புணர்ச்சியும், போக்குவரத்து நடத்தையும், ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி விபத்துகளே இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கத்துடன் உருவான அமைப்பு தான் உயிர். இந்த அமைப்பு சார்பில் கல்வி கூடங்களில் சாலை விழிப்புணர்வை உண்டாக்க குட்டிஸ்காப்ஸ் என்னும் திட்டம் உருவாக்கப்பட உள்ளதாக அறிகிறேன்.

    இத்திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகள், வீட்டின் கண்காணிப்பு அதிகாரிகளாக செயல்படுவார்கள். தமிழகம் முழுவதும் விபத்துக்களை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. நெஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படும் போது பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக காப்பாற்றுவதற்கு ரோந்து வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது. 108 ஆம்புலன்சு சேவை திட்டம் கட்டணமில்லாத வகையில் 24 மணி நேரமும் செயல்படுகிறது. 920 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகிறது.

    கடந்த 10ஆண்டுகளில் 4 லட்சத்து 68 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களிலும் இந்த மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை பகுதியில் ரூ.28.3 கோடி மதிப்பில் ஆஸ்பத்திரிகள் கட்டப்படும்.


    தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையின் காரணமாக விபத்து உயிர் இழப்புகள் 8.27 சதவீதத்தில் இருந்து 4.8 சதவீதமாக குறைந்து உள்ளது. விபத்து தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தற்போது இந்த உயிர் அமைப்பு சார்பாக கோவையில் உள்ள பல்வேறு சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதை இந்த அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். மேலும் தேவையான பாலங்கள் கட்டுவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து உப்பிலி பாளையம் வரையிலான உயர்மட்ட மேம்பாலத்தை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான விரைவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு முடியும் நிலையில் உள்ளது.

    இதே போல் உக்கடம் ஆத்துப்பாலம், காந்திபுரம் மேம்பாலம் என பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது. கோவை மாநகருக்குள் வெளியூர் செல்லும் வாகனங்கள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்வதற்காக கிழக்கு புறவழிச்சாலை, மேற்கு புறவழிச்சாலை என 2 புறவழிச்சாலை திட்டங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. நான் கடந்த 2011 ல் இருந்து நெஞ்சாலைத்துறை அமைச்சராக உள்ளேன். அதனால் மத்திய அரசிடம் இருந்து சாலைகளை மேம்படுத்த நிதி கேட்டுள்ளோம். அவர்கள் தமிழகம் முழுவதும் 40 சாலைகளை தேர்வு செய்து தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றவுள்ளனர்.

    முதல் கட்டமாக 19 சாலைகள் எடுக்கப்பட்டு 12 சாலைகளில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஞ்சி உள்ள சாலைகளிலும் பணிகள் தொடங்கும். இதே போல பல்வேறு பகுதிகளில் இருந்து நகருக்குள் பஸ்கள் வருவதால் ஏற்படும் நெருக்கடியை தவிர்ப்பதற்காக பஸ்போர்ட் எனப்படும் பேருந்து முனையங்கள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பஸ்போர்ட் அமைப்பதற்காக முதல்கட்டமாக சேலம், கோவை நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சேலம் வரையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நில அளவீடு பணிகள் முடிந்து விட்டது. சிலர் நீதிமன்றத்திற்கு சென்று உள்ளனர். இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் போது சென்னையில் இருந்து கோவைக்கு வருவதற்கும் வசதியாக இருக்கும். ஏன் என்றால் 77 கிலோ மீட்டர் தூரம் மிச்சமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #edappadipalaniswami
    Next Story
    ×