search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் - அதிமுக அரசுக்கு லாபமா? நஷ்டமா?
    X

    தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் - அதிமுக அரசுக்கு லாபமா? நஷ்டமா?

    டிடிவி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது, அதிமுக அரசுக்கு லாபமா? நஷ்டமா? என்பதை ஆராய்ந்து பார்த்தால் பல உண்மை நிலவரங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. #TTVDhinakaran #MLAsdisqualification #ADMK
    சென்னை:

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியால் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. உறுப்பினர் போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருந்து வருகின்றன.

    இந்த நிலையில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்த வழக்கை விசாரித்து வந்த 3-வது நீதிபதி சத்திய நாராயணன் நேற்று அதை உறுதி செய்து தீர்ப்பு வழங்கினார்.

    இதனால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

    சமீபத்தில், நாடு முழுவதும் காலியாக இருந்த சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதால் இந்த முடிவை எடுத்ததாக அதற்கு காரணம் தெரிவித்தது.

    தற்போது, மேலும் 18 தொகுதிகள் காலியாகியுள்ளதால், மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுடன் தான் இடைத்தேர்தல் நடத்தப்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.

    எனவே, அதுவரை ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு பிரச்சினை இல்லை என்றாலும், மெஜாரிட்டியை நிரூபிக்கக்கோரி தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.



    ஏனென்றால், தற்போதைய நிலையில் தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் பலம் 214 ஆக உள்ளது. இதை வைத்து மெஜாரிட்டியை கணக்கிடும்போது அ.தி.மு.க. அரசுக்கு 108 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது. தற்போது, அ.தி.மு.க.வுக்கு (சபாநாயகரையும் சேர்த்து) 116, தி.மு.க.வுக்கு 88, காங்கிரஸ் கட்சிக்கு 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என்ற வகையில் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.வாக டி.டி.வி.தினகரன் உள்ளார்.

    ஆனால், அ.தி.மு.க.வில் உள்ள ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ் (திருவாடானை), உ.தனியரசு (காங்கேயம்), தமிமுன் அன்சாரி (நாகப்பட்டினம்) ஆகிய 3 பேரும் தி.மு.க. மற்றும் டி.டி.வி.தினகரனுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர்.

    இதை வைத்து பார்க்கும்போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்மையான பலம் 110 என்ற நிலையிலேயே இருக்கிறது. மெஜாரிட்டியுடன் இதை கணக்கிடும்போது, கூடுதலாக 2 மட்டுமே உள்ளது. எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் அ.தி.மு.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அ.தி.மு.க.வில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மாற்றி வாக்களித்தாலே ஆட்சி கலைந்து விடும் அபாயம் உள்ளது.

    எனவே, அதுபோன்ற சூழ்நிலை வரும்போது, அ.தி.மு.க. அரசு சற்று ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டியுள்ளது. என்றாலும், அ.தி.மு.க.வுக்கு ஒருசில சாதகமான அம்சங்களும் இருக்கின்றன. அதாவது, தற்போது அதிருப்தியில் இருந்துவரும் 6 எம்.எல்.ஏ.க்களும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள்.

    இதில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    எனவே, இதைக் காரணம் காட்டியே அவர்கள் 3 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய 3 பேர் அ.தி.மு.க. அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால், அவர்கள் மீதும் இதே நடவடிக்கையை எடுக்க அ.தி.மு.க. தலைமை தயங்காது.

    இதுபோன்ற சாதகமான சூழ்நிலையால், மெஜாரிட்டியை தற்சமயம் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று அ.தி.மு.க. கருதினாலும், அடுத்த 5 மாதத்தில் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எப்படியும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்தத் தேர்தலில் 20 இடங்களில் கட்டாயம் 2 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியும் அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது.

    அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணிக்கு தற்போது எம்.எல்.ஏ.க்களின் பலம் 97 ஆக உள்ளது. இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுடன், சுயேச்சை எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரனின் ஆதரவையும் பெற்றால், மெஜாரிட்டி எண்ணிக்கையான 118-ஐ தி.மு.க.வால் எட்ட முடியும். ஆட்சி அரியணையிலும் தி.மு.க.வால் அமர முடியும்.

    அதே நேரத்தில், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கத்தை எதிர்த்து, டி.டி.வி.தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்தால், இடைத்தேர்தல் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது. அது அ.தி.மு.க. அரசுக்கு சாதகமாகவே அமைந்து விடும்.  #TTVDhinakaran #MLAsdisqualification #ADMK
    Next Story
    ×