search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாயை அவிழ்த்துவிட்டு சுகாதாரத்துறை செயலாளர், கலெக்டருக்கு மிரட்டல்- தொழிலாளி மீது வழக்கு
    X

    நாயை அவிழ்த்துவிட்டு சுகாதாரத்துறை செயலாளர், கலெக்டருக்கு மிரட்டல்- தொழிலாளி மீது வழக்கு

    டெங்கு கொசு ஒழிப்பு குறித்து ஆய்வு செய்த போது நாயை அவிழ்த்துவிட்டு சுகாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன் மற்றும் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் டெங்கு கொசு ஒழிப்பு குறித்து வீடு, வீடாக ஆய்வு செய்தனர்.

    அப்போது மணவாளநகர், காந்தி தெருவில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டை ஆய்வு செய்ய உள்ளே நுழைந்தனர்.

    உடனே பாலகிருஷ்ணன் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென வீட்டில் இருந்த நாய்களை அவிழ்த்து விட்டார்.

    இதனை கண்டு ஆய்வுக்கு வந்த சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாதுகாப்புக்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பாலகிருஷ்ணனை எச்சரித்து நாய்களை வெளியே விரட்டி விட்டனர்.

    பின்னர் அவரது வீட்டில் ஆய்வு செய்தனர். இதில் அந்த வீட்டில் டெங்கு கொசு உருவாகும் வகையில் சுகாதாரம் இல்லாமல் இருந்தது.

    இதையடுத்து பாலகிருஷ்ணனுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

    இதற்கிடையே அதிகாரிகளை பணி செய்யவிடாமல், அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக பாலகிருஷ்ணன் மீது மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மணவாளநகர் காந்தி தெருவில் சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ஆகியோர் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்ற போது பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் டெங்கு கொசு உற்பத்திக்கான அனைத்து ஆதாரங்களுடன் மிகவும் சுகாதாரமின்றி சீர்கேட்டுடன் இருந்தது. வீட்டின் உள்ளே செல்ல முயன்றபோது நான்கு பெரிய நாய்களை கொண்டு வீட்டின் உள்ளே வரவிடாமல் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டார்.

    ஏற்கனவே இதே போன்று துப்புரவு பணியாளர் மற்றும் டிபிசி பணியாளர்கள் பலமுறை இந்த வீட்டிற்கு சென்றபோது வீட்டிற்கு உள்ளே வரவிடாமல் நான்கு பெரிய நாய்களை கொண்டு பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் பணி செய்ய விடாமல் நடந்து கொண்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணன் என்பவரின் பயன்படுத்த படாமல் இருந்த மற்றொரு ஒடு; போட்ட வீடு முழுவதும் டெங்கு கொசு ஆதாரம் உள்ளது கண்டறியப்பட்டது. எனவே பொது சுகாதாரம் விதி 1939ன்படி ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த வீடு வருவாய்த்துறை மூலம் ‘சீல்’ வைக்கப்பட்டது.

    மணவாளர் நகர் காவல் நிலையத்தில் சுகாதாரதுறை மற்றும் உள்ளாட்சி துறை பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மூலம் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

    எனவே அரசுத்துறை அலுவலர்கள், அரசு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும். தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பொது சுகாதாரம் சட்டம் 1939 ன்படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #tamilnews
    Next Story
    ×