search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி போனசை உயர்த்தாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம்- 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்
    X

    தீபாவளி போனசை உயர்த்தாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம்- 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்

    தீபாவளி போனசை உயர்த்தாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். #diwali
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, மனுக்களை பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்றார். கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா முள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது நில பத்திரங்களை எடுத்து கொண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    அதில், கடவூர் ஜமீனிடமிருந்து கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. அதனை அனுபவித்து வந்த நிலையில், தற்போது கிராம கணக்கில் நிலஉச்சவரம்பு புஞ்சை நிலமாக தவறுதலாக உள்ளது. இதனை ரத்து செய்து விட்டு எங்களது கிரயபத்திரத்தின் அடிப்படையில் கணினியில் ஏற்றிவிட்டு மனைபட்டா மாற்றம் செய்து தர வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    குளித்தலையை சேர்ந்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், குளித்தலை காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதால் கடந்த 40 ஆண்டுகளாக எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மணல் அள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
    லாலாபேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன் கொடுத்த மனுவில், கரூர் மாவட்டம் கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். எனவே இங்கு போதிய படுக்கை வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

    கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் சிலர் தங்களுக்கு பணிக்கொடை நீண்ட நாட்களாக வழங்கப்படாதது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
     
    தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் வருகிற நவம்பர் மாதம் 5-ந் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கி 6-ந் தேதி இரவு 8 மணி வரை வேலைநிறுத்த போராட்டம் நடத்துவோம். அதன்பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தனர். #Diwali
    Next Story
    ×