search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கராபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    சங்கராபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    சங்கராபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் 1,400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 8 வார்டுகளும், இதன் துணை கிராமம் பாவளத்தில் 4 வார்டுகளும் உள்ளது.

    இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக திரவுபதியம்மன் கோவில், 4-வது வாய்க்கால், ஆற்றங்கரை, ஏரி ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் மேட்டுத்தெரு 12-வது வார்டு மற்றும் மேற்குத்தெரு 10-வது வார்டு பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 6.30 மணி அளவில் பஸ்நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உடனே குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு போலீசார், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்ற பொதுமக்கள் காலை 7.15 மணிக்கு மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேச்சல் கலைச்செல்வி, கருணாநிதி ஆகியோர் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதன் பேரில் அப்பகுதியில் நேற்று மதியம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    Next Story
    ×