search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான கார்.
    X
    விபத்துக்குள்ளான கார்.

    திருச்சி அருகே விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் பலி

    திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். #trichycaraccident
    திருச்சி:

    சென்னை மேடவாக்கம் ஜல்லடையான் பேட்டை செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்.

    இவரது உறவினர் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த் தலை சக்தி நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

    இந்த வீட்டை பார்ப்பதற்காகவும், கோவில்களுக்கு செல்லவும் சுப்பிரமணியன் முடிவு செய்தார். மகன்கள் மற்றும் உறவினர்கள் 12 பேருடன் நேற்று இரவு சென்னையில் இருந்து ஸ்கார்பியோ காரில் திருச்சி நோக்கி புறப்பட்டார்.

    காரை சுப்பிரமணியனின் இளைய மகன் பாலமுருகன் ஓட்டினார். இன்று அதிகாலை 4.20 மணிக்கு கார் திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது.

    அப்போது சாலையின் இடது ஓரம் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து 22 டன் இரும்புக்கம்பிகள் ஏற்றிய லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

    வேகமாக வந்த கார் சாலை யோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் காருக்குள் இருந்த 2 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 4 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பெயர் விபரம் வருமாறு:-

    சுப்பிரமணியன் (60), இவரது மனைவி ஜெயலட்சுமி (58), மகன்கள் பால முருகன் (46), விஜயராகவன் (43), பாலமுருகனின் மகன் கந்தசாமி (11), விஜயராகவனின் மனைவி கோமதி (40), சுப்பிரமணியனின் மருமகன் மஞ்சுநாதன் (40), அவரது குழந்தை நிவேதா.


    விபத்து நடந்த பகுதியில் போலீசார்  ஆய்வு செய்த போது எடுத்தப்படம்.

    சுங்கச்சாவடி ஊழியர்கள், காவலாளிகள், சமயபுரம் போலீசார் மற்றும் பொது மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சு வேன்கள் வரவழைக்கப்பட்டன.

    காருக்குள் இடிபாடுகளுக்குள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கவிதா, மஞ்சுநாதனின் மனைவி பாக்கியலட்சுமி, கந்தலட்சுமி, ரம்யா, ஜெயஸ்ரீ ஆகிய 5 பேரையும் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுங்கச்சாவடி பகுதியில் இரவு நேரங்களில் ஏராளமான லாரிகள், வெளி மாநிலங்களில் இருந்து பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

    சுங்கச்சாவடி அருகே சாலையின் இடது மற்றும் வலது ஓரங்களில் போதிய மின் விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் முன்னால் வாகனங்கள் நிற்பதை அறியாமல் மோதி விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

    விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இன்று அதிகாலை நடந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையில் இருபுறமும் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. #trichycaraccident
    Next Story
    ×