search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி மாவட்டத்தில் பலத்த மழை
    X

    தேனி மாவட்டத்தில் பலத்த மழை

    தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால் லோயர்கேம்ப் மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #Rain

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், குமுளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே கடந்த மாதம் பெய்த கன மழையின்போது லோயர்கேம்ப்- குமுளி மலைச்சாலையில் 3 இடங்களில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 15 நாட்கள் போக்குவரத்து தடைபட்டு சரி செய்யும் பணிகள் நடந்தது.

    சாலை துண்டிக்கப்பட்ட இடத்தில் மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டன. தற்போது கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் மணல் மூடைகள் சரிந்து சாலையின் மறுபுறமும் சேதம் அடைந்தது.

    இதனையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விபத்து ஏதேனும் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் பெரியாறு, வைகை அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.50 அடியாக உள்ளது. வரத்து 1079 கன அடி. திறப்பு 1200 கன அடி. இருப்பு 3726 மி.கன அடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 57.58 அடி. வரத்து 1173 கனஅடி. திறப்பு 2360 கன அடி. இருப்பு 3755 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.65 அடி. வரத்து 8 கன அடி. திறப்பு 3 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.62 அடி. வரத்து 9 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 2.4, தேக்கடி 9.6, கூடலூர் 8, சண்முகாநதி அணை 6, வீரபாண்டி 25, மஞ்சளாறு 2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #Rain

    Next Story
    ×