search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலைரெயில் கட்டணம் இரு மடங்கு உயர்வு - அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் அமல்
    X

    மலைரெயில் கட்டணம் இரு மடங்கு உயர்வு - அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் அமல்

    நீலகிரி மலை ரெயில் கட்டணம் அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் இரு மடங்காக உயர்த்தப்படுகிறது என ரெயில்வே அதி காரிகள் தெரிவித்தனர்.
    குன்னூர்:

    நீலகிரி மலை ரெயில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரெயிலாக உள்ளது. இதனால் நீலகிரி மலைரெயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய மலை ரெயில் அந்தஸ்து வழங்கி உள்ளது. இதன்காரணமாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எப்போதும் இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

    நீலகிரி மலை ரெயில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கும், பின்னர் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கும் பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதுதவிர குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    முகரம் பண்டிகையையொட்டி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறையாக உள்ளதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் குடும்பத்துடன் பயணிக்கின்றனர்.

    அப்போது இயற்கை காட்சிகளை ரசிப்பதுடன், அதனை புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். நேற்று குன்னூர் ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் போலீசார் சுற்றுலா பயணிகளை வரிசையில் நிறுத்தி பின்னர் மலை ரெயிலில் ஏற அனுமதித்தனர்.

    தற்போது குன்னூர்-ஊட்டி இடையே 2-ம் வகுப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை ரெயில்வே அதிகாரிகள் தற்போது இருமடங்காக உயர்த்தி உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே பயணிக்க நபர் ஒன்றுக்கு ரூ.15-ம், ஊட்டி-குன்னூர் இடையே பயணிக்க ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் தற்போது இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×