search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்.ராஜாவின் பேச்சு அதிகாரத் திமிர்- சீமான் கண்டனம்
    X

    எச்.ராஜாவின் பேச்சு அதிகாரத் திமிர்- சீமான் கண்டனம்

    நீதிமன்றம் மற்றும் காவல்துறையை இழிவுபடுத்தும் வகையில் எச்.ராஜா பேசியது அதிகாரத் திமிர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார். #Seeman #hraja
    சென்னை:

    புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதத்தின் போது, சென்னை உயர் நீதிமன்றம் குறித்தும் காவல்துறை குறித்தும் அவர் அவதூறாகவும், மிக மோசமாகவும் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது. அவர் மீதான புகார் தொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரித்தது. எச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    எச்.ராஜாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

    எச்.ராஜா பேசிய வார்த்தைகளை நாங்களோ, பிற இயக்கங்களோ பயன்படுத்தியிருந்தால் என்னவாகியிருக்கும்? சனநாயகப் பேராற்றல்களாக இருக்கிற ஊடகங்கள்தான் அதனை மக்களுக்குச் சொல்ல வேண்டும். பொதுவெளியில் வைரமுத்து பற்றியும், அவரது தாயார் பற்றியும் மிக இழிவாகப் பேசுகிறார். அதற்கு அவரது கட்சியின் தலைமையோ, ஆளுகிற அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    அதனைப் போலத் தற்போது காவல்துறையினரைப் பற்றியும், உயர்நீதிமன்றத்தைப் பற்றியும் மிக இழிவாகப் பேசுகிறார். அதிகாரத்திற்கு வந்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையினைத்தான் இதுவெல்லாம் காட்டுகிறது. இதனைத்தான் அதிகாரத் திமிர் என்கிறோம். அப்படியானால், சட்டமும், திட்டமும் சாமானியர்களுக்கு மட்டும்தானா? அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் அப்பாவிகளுக்கு மட்டும்தானா? என்கிற கேள்வியைத்தான் இதுவெல்லாம் எழுப்புகிறது. 

    எச்.ராஜா தான் வகிக்கிற பொறுப்பு, தனது வயது போன்றவற்றிற்காகவாவது பொறுப்புடன் நடந்துகொண்டிருக்க வேண்டும். அதனை விடுத்து வாய்க்கு வந்தபடி தான்தோன்றித்தனமாகப் பேசுவது அழகல்ல.

    இவ்வாறு சீமான் கூறினார்.  #Seeman #hraja
    Next Story
    ×